இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசன் விவகாரம்: புத்ரா ஜெயாவில் பாயில் அமர்ந்து கொடை பிடித்து மறியல்

இன்றைய நிலையில் 13 மெட்ரிகுலேசன் மையங்களில் 700  இந்திய மாணவர்கள் மட்டுமே பயில்வதாகவும் இன்னும் 800A-Thiruvengadam இடங்கள்  நிரப்பப்படாமல் இருக்கின்றன என மலேசிய இந்திய கல்வி சமூக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் ஆ.திருவேங்கடம் உறுதியாகச்  சொல்கின்றார்.

 

ஆக, இந்த உண்மை நிலை தெரிந்திருந்தும் துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் அமைச்சுக்கு ஆதரவாகவே பேசுகின்றார்.மெட்ரிகுலேசன் துறைத்  தலைவர் டாக்டர் சாரியா கொடுக்கும் எண்ணிக்கை விவரங்களை அப்படியே நிருபர்கள் முன் கமலநாதன் வாசிக்கின்றார். இன்னொரு பக்கம் இந்திய மாணவர்களின் விவரங்களை தான் இன்னும் பார்த்ததே இல்லையென்றும் அத்துறையினர் எந்த ஒரு தகவலையும்  தம்மிடம்  கொடுப்பதில்லை என்றும்  கூறிக்கொள்கின்றார் என்று திருவேங்கடம் அவரது அறிக்கையில் கூறுகிறார்.

 

கொடுக்கப்பட்ட இடங்கள் 1500 என்றும் 1850 என்றும் 2180 என்றும் ஒரு நாளைக்கு ஒரு எண்ணிக்கையை அவர் தருகின்றார்.

 

மேலும், அமைச்சர்கள் சுப்பிரமணியமும் பழனிவேலுவும் கமநாதன் செய்வார், கவனிப்பார் என்கின்றனர். கமலநாதனோ கல்வி அமைச்சும் மெட்ரிகுலேசன் துறையும் தம்முடன்  ஒத்துழைப்பதில்லை  என்கின்றார். இப்படியே மாறி மாறி ஆளுக்கொரு கதையைச்  சொல்லி  5 வாரங்களை மஇகா தலைவர்கள் வீணடித்து விட்டனர் என்று திருவேங்கடம் தமது அதிருப்தியைத் தெரிவிக்கிறார்.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் பற்றி மஇகா தலைவர்களுக்கு  எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே கிடைக்கும் அரசு பதவிகளிலேயே மஇகாவினர்  குறியாக இருக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

 

இந்தக் கல்வி ஏமாற்று நடவடிக்கையைக் கண்டு பொறுமை இழந்த பெற்றோர்களும் பொது மக்களும் வரும் வியாழக்கிழமை (ஜூலை 4) நண்பகல் 12 மணிக்கு புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகம் முன் கூடி அமைதி மறியல் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். பிரதமரைச் சந்திக்கும் முயற்சியிலும் அவர்கள்  இறங்குவார்கள். பிரதமர் சொன்ன 1500 இடங்கள் என்ன ஆயின என்று அவரிடம் பெற்றோர்கள் கேள்வி எழுப்புவர் என்கிறார் திருவேங்கடம்.

 

அதன் பின்னர், மெட்ரிகுலேசன் துறைக்குச் சென்று அந்த ஆயிரம் பெற்றோர்களும்  தரையில் பாயில் அமர்ந்து கொடைப் பிடித்து  அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்வர்.

 

இந்த ஏற்பாடு வெற்றிகரமாக நடக்க நாடு முழுதும் உள்ள அரசு சார்பற்ற  இயக்கங்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருவதாக கூறும் அவர், “எங்களது அழைப்பு இன்னும் கிடைக்காத பொது அமைப்புத் தலைவர்கள் எங்களை தொடர்பு கொள்ளும்படி திருவேங்கடம் கேட்டுக் கொள்கிறார்.

 

மறியலுக்கு வரும் நண்பர்கள் கல்வி அமைச்சு முன் அமர்ந்து மறியல் செய்யும் வகையில் கையில் பாயையும் கொடையையும் கொண்டுவர வேண்டுமென  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மழை  பெய்கின்றதோ இல்லையோ வெயில் அடிக்கின்றதோ இல்லையோ அங்கு வந்த அனைவரும் கொடை பிடுத்து பாயில் அமர்ந்து நூதன மறியலில் இறங்குவார்கள்.

 

இவ்வாண்டு நம் கல்வி உரிமை நம் கண் முன்னே பறிபோகின்றது. சென்ற ஆண்டு இப்படி கவனிக்காமல் விட்டதனால் வெறும் 943 மாணவர்களே  மெட்ரிகுலேசன் வாய்ப்பைப் பெற்றனர். 557 மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டது. இந்த உண்மையை மஇகாவும் முருகன் நிலையமும் ஒப்புக் கொள்கின்றன. இந்த உண்மையையும் மறைத்து சென்ற ஆண்டும் 1500 இடங்கள் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியது பொது மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது என்றாரவர்.

 

திக்கற்று, திசையற்று உதவ ஆள் இல்லாமல் பரிதவிக்கும் நம்மின மாணவர்களுக்கு உதவ பெற்றோர்கள், பொது அமைப்பினர், பொது மக்கள் ஆகியோர் தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து  கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் திருவேங்கடம் தங்களது தம்பி தங்கைகளுக்காக பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

 

இந்த வரலாற்று மறியல் போராட்டத்தில் பங்கெடுத்து நம் மாணவர்களுக்கு உதிவியவர்களுள் நீங்களும் ஒருவராகலாம்.தொடர்புக்கு ஆ.திருவேங்கடம் 0176470906, டாக்டர் சிவா 013 3377634.