–மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூலை 2, 2013.
கல்வித் துணையமைச்சரின் மெட்ரிகுலேசன் பட்டியலைக் காண்பிப்பேன், ஆனால் பிரசுரிக்க முடியாது என்ற செய்தியைப் பார்த்தேன். அதோடு அந்த பட்டியலை அவர் கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் கேட்டிருப்பதாகவும் அது வந்தவுடன் வேண்டுகின்றவர்களுக்கு அது காண்பிக்கப்படும் என்றும் கூறியிருக்கின்றார்.
அந்தப் பட்டியலை நான் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நான் எனக்காக கேட்கவில்லை. அதில் சம்பந்தப் பட்ட பெற்றோர்கள், குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு சாரா இயக்கங்கள் இவர்களிடம் காண்பித்தால் அவர்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வாய்ப்புண்டு.
எதிர்க்கட்சியச் சேர்ந்தவன் என்ற வகையிலும், இந்தியர்களின் நலனில் உங்களை விட அதிக அக்கறை உள்ளவன் என்ற வகையிலும் அரசாங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை மக்கள் முன் வைப்பது என் கடமை. அக்குறைகளைக் கலைய வேண்டியது நடப்பு அரசாங்கத்தின் கடமையாகும். அதில் ஒன்றுதான் இந்த மெட்ரிகுலேசன் விவகாரம்.
தேர்தலுக்கு முன்பே நான் இது பற்று விளக்கமாக அறிக்கை விட்டிருந்தேன். அதில் இவ்வருடம் மெட்ரிகுலேசனில் 500 இந்திய மாணவர்களுக்கு மேல் இடங்கள் வழங்கப்படவில்லை என்றும் அதனை அதிகரிப்பதற்கான முயற்சியில் ம.இ.க உடனடியாக இறங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அச்செய்திக்கு மறுப்புச் செய்தியாக, நான் மக்களை குழப்புவதாகவும், பொய் சொல்லுவதாகவும், நான் சமுதாயத்திற்கு ஒன்றுமே செய்யாதவன் போலவும் என்னைச் சாடினர். இப்பொழுது அழுத்தம் கொடுத்த பின்புதான் உண்மைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரத் தொடங்கியுள்ளன.
உண்மையில் 1850 பேருக்கு இடங்கள் வழங்கப்பட்டிருந்தால், மலேசிய இந்திய கல்வி சமூக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் ஆ.திருவேங்கடம் போன்றவர்கள் 340 பேர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு ம.இ.க தலைமையகத்தின் முன் மறியலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், வருகின்ற வியாழக்கிழமை கல்வி அமைச்சு முன் குடைப் பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் செய்ய பெற்றோர்களையும் மாணவர்களையும் அழைத்திருக்க மாட்டார்கள்.
இரண்டாம் கட்ட மாணவர்கள் ஜூன் 12ந் தேதி சேர்ந்துவிட்ட பட்சத்தில், இன்னும் எத்தனை இந்திய மாணவர்கள் அதில் சேர்ந்துள்ளார்கள் என்ற தகவல்கூட துணை கல்வி அமைச்சருக்கு இன்னும் தெரியவில்லையாம். இந்த லட்சணத்தில் 1850 இடங்களை இந்தியர்களுகு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது நகைப்புக்குரிய கேவலமான செயலாகும்..
முதல் கட்டத்தில் கொடுக்கப்பட்ட 1500 இடங்களில், 892 இடங்கள் நிரப்பப் பட்டன. 608 பேர் நிராகரித்தனர் . இரண்டாம் கட்டமாக ஏன் இந்த 608 பேர் அழைக்கப்படவில்லை? அதைவிடுத்து ஏன் 350 பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு விளக்கம் கூறாமல், அவரும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்.
அதோடு மொத்த மெட்ரிகுலேசன் இடங்கள் வெறும் 6150 என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில் மொத்த இடங்கள் 28,000. இந்த அடிப்படை புள்ளிவிவரங்கள் கூட தெரியாமல் இருக்கும் .கமலநாதன் எப்படித்தான் துணக்கல்வி அமைச்சராக இருந்து இந்திய சமூகத்திற்கு சாதனைகள் புரியப் போகிறார் என்று தெரியவில்லை.
இது ஒரு சதித் திட்டமா?
இந்திய மாணவர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்காததற்கு அரசாங்கமும் ஒரு காரணம் என்று துணை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாவது , மெட்ரிகுலேசன் நுழைவு நாள் மே மதம் 28 என்று இருக்கும் பொழுது எறக்குறைய 2 மாதம் கழித்து மாணவர்களைச் சேர்ப்பதனால் அவர்களால் ஆரம்பத்தில் சேர்ந்துவிட்ட மாணவர்களுடன் படிப்பில் போட்டி போடுவது என்பது இயலாமல் போகிறது. அதோடு 2 மாதத்திற்கு ஒரு முறை நடைபெரும் பரீட்சையில் கால தாமதமானதால் அவர்களால் திறமையாக எழுதமுடியாமல் போகிறது.
பரீட்சையில் நன்றாக செய்யாவிட்டால், 4.0 புள்ளிகளுடன் முழுதேர்ச்சியை அவர்கள் வருட இறுதியில் பெறமுடியாது. இதனால் அவர்கள் விரும்பிய மருத்துவத் துறைக்கோ, பொறியியல் துறைக்கோ மனு செய்யமுடியாமல் போகிறது.
அதோடு, சில 10 A க்கள் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய துறையைத் தவிர்த்து வேறு துறைகள் வழங்கப்படும் போது அதை அவர்கள் நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது அவர்களின் தவறல்ல. இரவு பகல் கடின உழைப்பிற்கு பிறகு தங்கள் வாழ்நாள் துறை என்று ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு வேறு துறைக்கு படிக்க இடங்கொடுத்தால் அதை மறுக்க வேண்டியதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
இதை ஒரு வகையான திட்டமிட்ட சதி என்றும் கூறலாம். மாணவர்களுக்கு இப்படி காலம் தாழ்த்தி இடங் கொடுப்பதனாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாலும் மாணவர்கள் இந்த இடங்களை நிராகரிகின்றார்கள்.
அவர்கள், பின்பு வெவ்வேறு இடங்களுக்கு பயலிலச் சென்றவுடன் அதனை ஒரு காரணம் காட்டி, நாங்கள் இடம் கொடுத்தோம் இந்திய மாணவர்கள் நிராகரித்துவிட்டார்கள். ஆகவே அரசாங்கத்தைதை இந்திய சமூகம் குறை கூறக்கூடாது என்று இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பார்க்கும் இந்த அரசு. இதற்கு ஒத்து ஊதுவதற்கு கமலாநாதனும் மற்ற ம.இ.கா வினரும் தயாராக காத்திருப்பார்கள்.
அரசியல் பிழைத்தோரை அறமே ஒறுக்குமாம் என்பது போல, இந்த அரசு தன் சொந்த குடிமக்களுக்கு எதிராகச் செய்யும் தவறுகளுக்கு அந்த அறமே ஒரு நாள் அவர்களைத் தண்டிக்கும் என்பது திண்ணம்
மாண்புமிகு கமலநாதன் அவர்களே அரசியலில் நீங்கள் நீடித்து மக்கள் மனதில் இடம் பெற வேண்டுமானால்.மனதில்,செய்கையில் நேர்மையை கடைபிடியுங்கள்.மற்ற அரசியல் வாதிகளை போல் பதவிக்காக நம் சமுதாய நலனை அடகு வைக்காதீர்கள்.
இடைத்தேர்தலில் வெற்றி கொண்டது முதல் நீங்கள் சொன்ன நேர்மையை இவர் தூக்கி எரிந்து விட்டார்…இப்போது இவர்களது எண்ணம் நோக்கம் எல்லாமே தங்களது ‘political survival ‘ பற்றி மட்டும்தான் இருக்கும்!
அதிலும் இந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு, துணை அமைச்சர் வேறு….சொல்லவே வேண்டாம்!
இறைவா ஸ்ரீ லங்காவில் தமிழனை உயிரோடு கொன்றனர் . ஆனால் மலேசியாவில் தமிழனை கல்வி என்ற ஆயுதத்தால் கொல்கின்றனர். யார் கேற்பார் இந்தக் கொடுமையை . ம இ கா தலைவர்களோ கூட்டிக்குடுக்க கூட தயங்க மாட்டானங்க .