சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்மூட் குடும்பத்தாருடன் தொடர்புகொண்ட நிறுவனங்கள் கமுக்கமாக நிலங்கள் கொள்முதல் செய்திருப்பதாகக் கூறும் பண்டார் கூச்சிங் எம்பி சோங் சியெங் ஜென் அதற்கான ஆதாரங்களை கொடுத்துதவ வேண்டும் என மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கேட்டுக்கொண்டிருக்கிறது.
எம்ஏசிசி இன்று விடுத்த அறிக்கை ஒன்றில்,“இவ்விவகாரத்தில் சோங் தகவலளிக்க முன்வந்தால் மிகவும் வரவேற்போம்”, என்று கூறி இருந்தது.
தயிப் குடும்பத்தாருடன் தொடர்புள்ள ஏழு நிறுவனங்கள் 94,773 ஏக்கர் அரசு நிலங்களை ரிம200 மில்லியனுக்கு வாங்கி இருப்பதாக சோங் நேற்று கூறி இருந்தார். நிலங்களின் சந்தை மதிப்பு ரிம 1பில்லியனாம்.
2000-க்கும் 2008-க்குமிடையில் நிகழ்ந்துள்ள இக்கொள்முதல் தொடர்பான மேல்விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதாக சோங் அறிவித்துள்ளார்.