கூட்டரசு பிரதேச இஸ்லாமிய நிர்வாக மசோதா சிலாங்கூரிலும் வீண் சலசலப்பை ஏற்படுத்தும்

டாக்டர் சேவியர்ஜெயக்குமார், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்,ஜூலை 3, 2013.

 
XavierJayakumarகடந்த வாரம்  மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்ட குழந்தைகள்  மத மாற்றம் மீதான மசோதாவை மீண்டும் அடுத்த வாசிப்புக்கு எடுத்துச் சென்று அதனைச் சட்டமாக்கும் யுக்தியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இரண்டு விதக் கருத்து இருக்க முடியாது. அந்த விதியிலுள்ள அநீதியை உணர்ந்து, அமைச்சரவை 2009 ஆம் ஆண்டே, முஸ்லிமாக மதம் மாறும் பெற்றோர்களில் ஒருவர் குழந்தைகளை இஸ்லாத்துக்கு மாற்றுவதற்கு எதிராக முடிவு எடுத்துள்ளது.

 

என்ன சூழ்நிலை?

அன்றைய முடிவு சரியானது. பெற்றோர்கள் என்பது தாய், தந்தை இருவரையும் குறிக்கும். ஆக, ஒரு குழந்தையின் நலன் மீது முடிவு எடுக்கப்  பெற்றோர்கள் இருவருக்கும் உள்ள உரிமை, சமயத்தைத் தீர்மானிக்கும் விசயத்தில் மட்டும் இல்லை என்பது நீதியல்ல. அப்படிச் சொல்ல எவருக்கும் உரிமையுமில்லை. அன்றைய முடிவு நீதியின் அடிப்படையில் எடுக்கப் பட்டதேயன்றிச் சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்பதனைத்  துணைப் பிரதமர் மொகிதீன் யாசின் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

குழந்தைகளை மதம் மாற்றுவதற்குப் பெற்றோர்களில்  ஒருவருடைய  அனுமதி போதும் எனக்கூறும் 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக மசோதாவின் 107ம் பிரிவு (b)  முஸ்லிம் அல்லாத குடும்பத்தில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி, குடும்ப  அடிப்படையைத் தகர்க்கும் என்பதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். துணைப் பிரதமர் கூறுவதைப் போன்று 2009ம் ஆண்டு அமைச்சரவை முடிவு சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப் பட்டதாக இருந்தால்,  கடந்த 14  ஆண்டுகளில்  எந்த வகையில் அந்தச்  சூழ்நிலைகள் மாறியுள்ளன என்பதனை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

 

பெரும்பாலும் மதம் மாறிய கணவர்களிடமிருந்து தங்கள் குழந்தைகளை மீட்க நடக்கும் சட்ட மற்றும் குடும்பப் போராட்டங்களைக் கண்டு மக்கள் வெறுப்புக் கொண்டுள்ள இவ்வேளையில், இது  போன்ற சட்டங்கள்  நாட்டில்  இன   ஒற்றுமைக்கும் வீண் சந்தேகங்களுக்கும்  இட்டுச் செல்லும்.

 

சிலாங்கூர் மாநில இஸ்லாமிய நிர்வாகச் சட்டம்

 

இதைவிட மோசமான சாரத்தைச் சிலாங்கூர் மாநிலஇஸ்லாமிய நிர்வாகச் சட்டம் 1989”  கொண்டுள்ளது  என்பது மறுப்பதற்கில்லை. அது பெற்றோர்களில்  ஒருவர் முஸ்லிமாக மாறியுள்ளபட்சத்தில்  அவர்களின்  பிள்ளைகளை  இயற்கையாக மதம் மாறியவர்களாகக் கருதக் கூடியது. மக்கள் அதனை  அப்போதே கடுமையாக எதிர்த்ததாலும், பிறகு நீதிமன்றத்தில்  வழக்கு ஒன்று தோல்வி கண்டதாலும் அதனைத் தொடர்ந்து அமல் செய்யவில்லை.

 

ஆனால் நாடாளுமன்றம் 2013ம் ஆண்டுக்கான கூட்டரசு பிரதேச இஸ்லாமிய நிர்வாக மசோதாவின் 107ம் பிரிவு (b) க்கு அங்கீகாரம் வழங்கும் முடிவுகள், 1989ம்  ஆண்டு சிலாங்கூர் மாநில இஸ்லாமிய நிர்வாகச் சட்டத்தில் முடக்கத்திலுள்ள விதியின் சில பகுதிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கு ஒப்பாக அமைந்துவிடும். 

 

அந்தச் சட்டத்தின் சில கூறுகள் குறிப்பாக, மதம் மாறும் ஒரு தாய் அல்லது தந்தையைப் பின் தொடர்ந்து அவர்களின் பிள்ளைகள் இயற்கையாக  மத மாறியவர்களாக எடுத்துக் கொள்ளும் அம்சம் மிக ஆபத்தானது.

 

ஆக, அன்றைய தலைமைத்துவத்தில் சட்டத்தினை மொழியாக்கம் செய்தவர்களின் தவற்றுக்காக பொதுமக்களை குறிப்பாக இஸ்லாமியர் அல்லாத குடும்ப உறவுகள் நீர்மூலமாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது அன்றைய அநீதியான சட்டங்களுக்கு  மீண்டும்   உயிர் கொடுப்பதற்கு  ஒப்பாகும்.

 

இது மக்களின் அடிப்படை வாழ்க்கை முறையைப் பாதிக்கும் மிக முக்கியமான விவகாரம் என்பதால் அரசியல் வேறுபாடின்றிச் சமூகத்தின் எல்லாத் தரப்பினராலும்  அந்த விதி எதிர்க்கப்படுகிறது என்பதை உணர்ந்து அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும்.

 

 

 

TAGS: