கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் சுல்தான் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளின் தொடரில் 2- 7-2013 செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர், பொது இடங்களிலும், திறந்த வெளிகளிலும் மது அருந்துவதைத் தடை செய்யும் ஒரு சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தச் சட்ட விதி போலீசாருக்கும் நகராட்சி மன்றங்களுக்கும் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும், அதே வேளையில் குடிப்பழக்கம் சிறார்களிடம் பரவுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாகவும், மக்களின் சுகாதாரக் கேட்டுக்கு வழி வகுக்கும் மலிவு விலை மதுபானத்தை ஒழிக்கும் நோக்கமுடையதாக இருக்க வேண்டும் என்றார்.
தனது சேவை மையங்களுக்கு வரும் பல புகார்கள் மலிவு விலை மதுவினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பல இன்னல்கள் தொடர்புடையதாக இருப்பதாக அவர் கூறினார். இந்த மலிவு விலை மதுவைச் சிறுவர் விளையாட்டு திடல்களிலும், பஸ் நிற்கும் இடம், வீடமைப்பு பகுதிகளில் உள்ள ஒதுக்கீட்டு நிலங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பொது இடங்களில் அருந்திவிட்டுப் பொது ஒழுங்குக்கும், அமைதிக்கும், தூய்மைக்கும் பாதகம் ஏற்படும் ரீதியில் மது அருந்துபவர்கள் நடந்து கொள்கின்றனர் என்றார் சேவியர்.
இதனால் இப்படிப்பட்ட இடங்களுக்கு அருகில் வாழும் மக்கள் அதிக அசௌகரியத்தை அடைவதுடன், மது பிரியர்கள் மது அருந்திவிட்டு உடைத்து எறியும் போத்தல்கள் பொது இடங்களைப் பயன்படுத்தும் பொது மக்களுக்கும் சிறுவர்களுக்கும் பெரிய ஆபத்தாக முடிகிறது. இரவு நேரங்களில் வீண் சண்டை சச்சரவுகள், சத்தமும் ஏற்படுவதுடன், பிள்ளைகள் மற்றும் சிறுவர்களிடம் மது பழக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்கிறது.
ஆகவே, எதிர்காலச் சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு சரியான சட்டதிட்டத்தை இயற்ற வேண்டியது மாநில அரசின் கடமையாகும் என்றார். இது போன்ற சட்டங்கள் ஆஸ்ட்ரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் உண்டு. மதுபானங்களைக் கடற்கரை உட்படப் பொது இடங்களுக்கு எடுத்துச் செல்வதும், அங்கு அருந்துவதும் குற்றமாகும். இப்படிப்பட்ட குற்றங்களுக்கு ஆஸ்ட்ரேலியா வெள்ளி ஆயிரம் வரை அபராதம் விதிக்கப் படுகிறது என்றாரவர்.
மலிவான மது தீய பழக்கங்களையும், சமூக சீர்கேடுகளையும் வளர்ப்பதுடன் குடும்ப உறவை சீரழித்து வருவதுடன், அதிகப்படியான குற்ற செயல்களுக்கும், உடல் நலக் கேட்டுக்கும் இட்டுச் செல்வதுடன் படிப்படியாகப் பள்ளி மாணவர்களிடமும் இப்பழக்கம் பரவத் தொடங்கி விடுவதால், அரசாங்கம் மலிவான அதிகப் போதைத்தரும் மதுவையும், அதன் விற்பனையையும், உற்பத்தியாளர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். இவை படிப்படியாக ஒழிக்கப் படவேண்டும் என்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
நல்ல கோரிக்கை சார், பதயில் இருந்தாலும் தூங்கி வழியற பலபேர் நாற்காலியை மட்டும் சூடேத்தரானுங்க. உங்கள் கோரிக்கை மிக துணிச்சலானது , ;நியாமானது, உங்க சமூக பற்றை காட்டுகிறது. ஆனா சம்சு காச்சர சீன பய டி.ஏ.பி காரன் ஒத்துக்குவான சார்?.