மகாதீரின் வக்ர புத்தி!

-மு. குலசேகரன், 28 ஜூலை, 2013.

kulaநேற்றைய (26-7-13) ஓர் ஆங்கில நாளிதழில் பிரசுரமான கட்டுரை ஒன்றில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது 10 லட்சம் தகுதியில்லாத சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும்  குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக  குதர்க்கமாக எழுதியுள்ளார்.

 

எப்பொழுதுமே மகாதீர் தன்னுடைய எழுதுக்களில் சீனர்களும் இந்தியர்களும் விரும்பத்தகாதவர்கள் போலவும் வலுக்கட்டாயமாக, மலாய்க்காரர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த நாட்டில் குடியமர்த்தப்பட்வர்கள் போலவும் கூறி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு முன்னாள் பிரதமர், எல்லா இன மக்களுக்கும் தலைவராக இருந்தவர், அடிக்கடி இப்படி மலாய்க்காரர் அல்லதாரை சாடி வருவது அவரின் விசனப் புத்தியையும், இன வெறியையும் பிரதிபளிக்கிறது. ஒருவருக்கு வயது ஏற ஏற சாந்தமும் முதிர்ச்சியும் ஏற்படும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த மாகாதீருக்கோ வக்ர புத்தி மேலோங்கி, அறிவு மங்கிக் கொண்டே போகின்றது.

 

மகாதீரின் மண்டையில் உரைக்கின்ற மாதிரி ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியர்களும் (உங்கள் அப்பன்  உட்பட), சீனர்களும் ஏன் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டார்கள் என்பதை சரித்திரம் நன்றாகவே பதிவு செய்துள்ளது.

 

அப்பொழுது நாட்டை ஆண்ட வெள்ளையன் இந்த காட்டை  களனியாக்க உள்ளூர் வாசிகளான மலாய்க்காரார்கள் முன் வராததாலும், கடின உழைப்பு என்பது அவர்களுக்கு புரியாதது என்பதாலும், அதே சமயம் இந்தியாவிலும் சீனாவிலும் உழைப்பாளிகள் நிறைய இருந்ததாலும் அவ்விறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு வேலைக்கமர்த்தப்பட்டனர்.

 

தாங்கள் குடியேறிய நாட்டை வளப்படுத்த தங்கள் இரத்ததை வேர்வையாகச் சிந்தியும், சுகாதாரக் குறைவான இடங்களில் வாழ்ந்தும், நோய் நொடிகளுக்கிடையே போராடி  சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த வர்கத்தை பார்த்து நீங்கள் வேண்டாதவர்கள் என்று கூறுவது நன்றி கெட்ட தனம், இன  வாதப் பேச்சு.

 

இந்தியப் பெண்களும் ஆண்களுக்குச் சமமாகப் போட்டி போட்டு தோட்டங்களிலும் சாலைகளிலும் வேர்வை சிந்த வேலை செய்தது மாகாதீருக்கும் தெரிந்த ஒன்று. இதே மாகாதிரின் தந்தை அன்று பிரிட்ஷாரின் கருணையால் இங்கு வரமுடியாமல் போயிருந்தால், இன்று பொய்யான  மலாய்க்காரரான இந்த மாகதீர் இந்நாட்டை தன் சர்வாதிகாரத்தால் 22 வருடம் ஆண்டு இப்படி கொக்கரித்துக்கொண்டு இருக்க முடியுமா ?

 

தன் பூர்வீகத்தை மறப்பவனை, மறைப்பவனை  ஒருவேளை மன்னிக்கலாம். ஆனால் அதே பூர்வீகத்தை இழிவுபடுத்துகிறவனை எந்த ஒரு சமுதாயமும் மன்னிக்காது.

 

தாம் ஒரு முன்னாள் பிரதமர், தமக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது என்ற கர்வத்தில் மாகாதீர் உளறிக்கொண்டிருகிறார். உண்மையிலேயே இந்த நாட்டின் மலாய்க்காரர்கள் மிகவும் நல்லவர்கள் , ஆனால் அவர்களைக் கெடுப்பதே இந்த மாகாதீர் போன்ற இடையில் தன்னை மலாய்க்காரர்கள் என்று பிரகடனப்படுத்திகொண்ட பொய்யனா மலாய்க்காரர்கள்தாம்.

 

10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது என்பது  முறையாகவும் மூவின மக்களின் தலைவர்களின்mahathir  ஒப்புதலோடும், அப்போதைய  பிரிடிஷ் அரசாங்கத்தின் அனுமதியோடும்தான் வழங்கப்பட்டது என்பது மகாதீருக்கு நன்றாகவே தெரியும். அந்தக் குடியுரிமை இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் இந்த நாட்டின் வளப்பதிற்காக அவர்கள் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக கொடுக்கப்பட்டது. அவர்கள் செய்த அந்தத் தியாகமும் உழைப்புமே அவர்கள் குடியுரிமை பெறுவதற்குப் போதிய தகுதிகளாக இருக்கும் போது, தகுதியற்றவர்கள் என்று அவர்களுக்கு பட்டம் சூட்டி, இழிவு படுத்துவது மகாதீரின் வக்ர புத்தியைக் காட்டுகிறது!  

 

சாபாவில் என்ன நடந்தது என்பதனை மாகாதீர் நினைவில் கொள்ள வேண்டும். கள்ளக் குடியேறிகளாக வந்தவர்களையும், கொள்ளை அடிக்க வந்தவர்களையும் ஒன்று சேர்த்து அவர்களுக்கு மொத்தமாக குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்தது யார்? “புரொஜெக்-எம்” எனப் புனைப்பெயரால் இயங்கிய அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கங்கள் இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள அரசு ஆணையத்தால் அம்பலப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே அதைப்பற்றி மாகாதீர் என்ன சொல்ல விரும்புகிறார் ? சபாவை தன்னுடன் இணைத்துக் கொண்டு மலேசியா என்ற நாடு உருவான பிறகு  அங்கு அதிமாக பிரஜைகள் முஸ்லீம் அல்லதவர்காள் என்று அறிந்ததும், அந்த நாட்டில் இயல்பாக அமைந்த மக்கள்தொகையையே மாற்றி அங்கு அதிகமானோர் முஸ்லீம்களாக இருக்க வேண்டும் என்ற தீய எண்ணதில் கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்கி எந்த ஒரு நாட்டிலுமே நடை பெறாத சாதனையச் நடத்திக்  காட்டியவர் இந்த மகாதீர்.

 

இப்படிப்பட்ட  மக்கள்  குடியுரிமைப் பெற தகுதியானவர்களா? அல்லது முறையாக வரவழைக்கப்பட்டு, உழைப்பைத் தந்து நாடு வளமடையச் செய்த இந்தியர்களும் சீனர்களும் குடியுரிமைப் பெற தகுதியானவர்களா ?

 

மக்களுக்கும் உண்மை தெரியும். மகாதீருக்கும் இது தெரியும் . மக்களின் மனதில் குழப்பதை உண்டு பண்ணி அதில் குளிர்காய விரும்பும் மட்டமான அரசியல்வாதி இந்த மகாதீர் என்பதனை மக்கள் புரிந்திடல் வேண்டும்.

 

 

 

TAGS: