சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் சீக்கியரா? இஸ்லாமியரா?

p33எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக ‘சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ‘ என்ற தலைப்பில் எழுதிவரும் தொடர், சிறப்பு கட்டுரை பகுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. படிக்கத் தவறாதீர்!

(கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 4) 

part4 1 siladassஅரசியலமைப்புச்  சட்டத்தின்  121(1)  சரத்தில்  செய்யப்பட்டத்   திருத்தங்கள்  1988இல்  அமலாக்கப்பட்டப்பின்  உயர்  நிதிமன்றங்கள்  முன்னே  கொண்டுவரப்பட்ட  வழக்குகளைக்  கவனிப்போம். 

1992ஆம்  ஆண்டில்  டலிப்  கோருக்கும்  புக்கிட்  மெர்டாஜம்  மாவட்ட  போலீஸ்  அதிகாரிக்கும் (Dalip  Kaur v.Pegawai Daerah,  Bukit  Mertajam) நடந்த   வழக்கில்  சில  ஆக்கப்பூர்வமான  கருத்துக்களை  வெளியிட்டது  மலேசியாவின்  உச்ச  நீதிமன்றம் (Supreme  Court).

டிலிப்  கோர்  தொடுத்த  வழக்கில்,  தன்  மகன்  குருதேவ்  சிங்  3.10.1990இல்  இறந்தபோது  ஒரு  முஸ்லிம்  அல்ல, அல்லது  இஸ்லாத்தைத்   துறந்துவிட்டார்  என்று  நீதிமன்றத்தின்  பிரகடனத்தை  வேண்டினார்.  தமது  மனுவில்  தன்  மகன் குர்தேவ்  சிங்  சீக்கியராகப்  பிறந்தவர்.  சீக்கிய   ஆச்சாரப்படி  வளர்க்கப்பட்டவர்.  1.6.1991ல்  இஸ்லாத்தைத்  தழுவினார்.  9.9.1991ல்  ஒரு  பத்திரத்தின் மூலமாக (Deed  Poll)  இஸ்லாத்தைத்  துறந்து  மீண்டும்  சீக்கிய  சமயத்துக்குத்  திரும்பி  அதன் ஆச்சாரத்தைப்   பின்பற்றினார்.  இறந்த  தன்  மகன் சீக்கிய கோயிலுக்கு  அடிக்கடி  போனார், பன்றி  இறைச்சியையும்  உண்டார், நுனித்தோலை,  அதாவது  சுன்னத்து,  செய்து  கொள்ளவில்லை  என்றும்   குறிப்பிட்டிருந்தார்,

[இதற்கு முன்பு வெளியான பகுதிகள், இப்பகுதியின் இறுதியில் இணைக்கபட்டுள்ளன] 

இறக்கும் போது முஸ்லிம்தான்

part 42நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட   ஆவணங்களில்  குர்தேவ்  ஒரு  முஸ்லிம்  பெண்ணை  25.11.1991ல்  திருமணம்  செய்து கொள்ள  திட்டமிட்டிருந்தார்  என்பது  வெளிப்பட்டது.  அதோடு,  தாம் இஸ்லாத்தைத்  துறந்துவிட்டதாக  குறிப்பிடப்பட்ட  பத்திரம்  போலி  கையெழுத்தைக்  கொண்டிருந்தது  என  உயர்நீதிமன்றம்  முடிவுக்கு  வந்தது.  இந்த  ஆவணங்கள்  எல்லாம்  கண்ணுற்ற  நீதிபதி,  குருதேவ்  இறக்கும்போது முஸ்லிமாக  இறந்தார்  என்று  தீர்ப்பளித்தார்.

அந்தக்  காலகட்டத்தில்  இயங்கிய  உச்ச  நீதிமன்றத்துக்கு (Supreme  Court) மேல்முறையீடு  செய்யப்பட்டது.  அப்போது  மலாயா   உயர்நீதிமன்றங்களின்   தலைமை  நீதிபதியாக  இருந்த  ஹஷிம்  யோப்  ஸானி (Hashim  yeop Sani),  121(1A)  ஷரத்தை  வியாக்கியானம்   செய்தது  அப்பழுக்கற்றது  என்று  சட்ட அறிஞர்களும்,  அரசியலமைப்புச்  சட்ட நிபுணர்களும்  ஒருமித்து  ஒப்புக் கொண்டனர்.

மாநில அரசு இஸ்லாமிய சட்டத்திற்கு சிவில் நீதிமன்றம் அடிபணியுமா?  

part43தலைமை  நீதிபதி  தமது  தீர்ப்பில்,  தெளிவான  சட்ட விதிகளை  இயற்றுவது  மாநிலங்களின்  பொறுப்பாகும்,  இதன்  வழி  சிவில்  நீதிமன்றங்கள்  அவற்றை  வியாக்கியானம்  செய்யும்  போது  குழப்பத்தைத்   தவிர்க்க  உதவும்  என்றார்.  அதோடு  10.6.1988லிருந்து   121(1A)   ஷரத்தின்படி  ஷரியா  நீதிமன்றங்களின்  அதிகாரத்தில்   தலையிடும்  சிவில்  நீதிமன்றங்களின்  அதிகாரம்  நீக்கப்பட்டுவிட்டது.  ஆனாலும்  மாநில  அரசுகள்  முஸ்லிம்  சட்டத்தை  நிர்வகிக்கும்  பொருட்டு  இயற்றும்  எந்தச்  சட்டத்தையும்  வியாக்கியானம்  செய்யும்  சிவில்  நீதிமன்றத்தின்  அதிகாரத்தை   நீக்கிவிடவில்லை  என்றார்.

இதன்  அர்த்தம்  என்னவெனில், 121(1A)   ஷரத்து  சிவில்  நீதிமன்றங்களின்  அதிகாரத்தை  இஸ்லாம்  சம்பந்தப்பட்ட  கருப்பொருள்களில்  தலையிடுவதை  தடுத்த  போதிலும் இஸ்லாமியச்  சட்டத்தை  நிர்வகிக்கும்  பொருட்டு  மாநில  அரசுகள்  இயற்றும்  மாநில  இஸ்லாமியச்  சட்டத்தை  வியாக்கியானம்  செய்யும்  அதிகாரம்  சிவில்  நீதிமன்றத்துக்கு  உண்டு.  ஏன்  இப்படி  அவர்  சொன்னார்  என்பதை  கவனிக்க  வேண்டும்.

இஸ்லாமிய  சட்டத்தை  நிர்வகிக்கும்  அதிகாரம்  மாநில  அரசுகளுக்கு   இருந்த  போதிலும்  அப்படி  இயற்றப் பெற்ற  இஸ்லாமிய  சட்டங்கள்   அரசியலமைப்புச் சட்டத்துக்குப்  புறம்பாக  இருக்கக்கூடாது   என்ற  அரசியல்   சட்டத்தின் அடிப்படைத்  தத்துவத்தின்  முக்கியத்துவத்தை  வலியுறுத்தியது.

அரசியலமப்பு ஒப்புயர்வற்றது – பூனைக்கு யார் மணி கட்டுவது?

part 44இன்னும்  விரிவாகச்  சொல்ல  வேண்டுமானால்   அரசியலமைப்புச்  சட்டத்தின்  4ஆம்  ஷரத்தானது  “இந்த  அரசியலமைப்புச்  சட்டம்  கூட்டரசின்  ஒப்புயர்வற்ற  சட்டமாகும்,  சுதந்திர  தினத்திற்குப்  பிறகு (31.8.1957)  “இந்த  அரசியலமைப்புச்  சட்டத்திற்குப்  புறம்பாக  இயற்றப்படும்  சட்டம்  செல்லுபடியாகாது”  என்கிறது.

இதன் அடிப்படையில்  அரசியலமைப்புச்  சட்டத்திற்குப்  புறம்பாக  மாநில அரசுகள்  சட்டம்  இயற்றினால்  அவை  செல்லத்தக்கதல்ல  என்பதில்  ஐயமில்லை.  அவ்வாறு  இயற்றப்   பெற்ற  சட்டத்தை   வியாக்கியானம்  செய்து அது  செல்லத்தக்கதல்ல  என்று  பிரகடனப்படுத்தும்  அதிகாரம்  மதச்சார்பற்ற  உயர்நீதிமன்றத்துக்கு  உண்டு.

இதைத்தான்  தலைமை  நீதிபதி  ஹஷிம்  யோப்  ஸானி  சொன்னார்.  அதுவே  அரசியலமைப்புச் சட்டம்  வழங்கும்  பாதுகாப்பு.  அதாவது,  சட்டத்திற்குப்  புறம்பாக  எடுக்கப்படும் எந்த  நடவடிக்கையையும்   செல்லத்தக்கது  அல்ல என்று  பிரகடனப்படுத்தும் அதிகாரம் சிவில்  உயர்நீதிமன்றங்களுக்கு  மட்டுமே  உண்டு.

டலிப்  கோரின்  வழக்கில்  மற்றுமொரு  முறையைக்  கடைபிடித்ததைக்  காணலாம்.  சிவில்  நீதிமன்றம்  இஸ்லாத்தைப்  பற்றி  எல்லா  நுணுக்கமான  விவரங்களையும்  அறிந்து  கொண்டிருக்க  முடியாது.  எனவே,  இருதரப்பினரின்  ஒப்புதலோடு  கிட்டா  ஃவத்வா  (Fatwa)  குழுவின்  அபிப்பிராயத்தைக்   கோரும்படி  விழைந்தது  உச்ச நீதிமன்றம்.  அந்தக்  குழு  குருதேவ்  சிங்  இறக்கும்போது  முஸ்லிமாக  இறந்தார்   என்ற  வெளியிட்ட  முடிவை  நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டது.

மதச்சார்பற்ற   நீதிமன்றம்   சில  வேளைகளில்  நிபுணத்துவ   அபிப்பிராயங்களைப்  பெறுவது  ஒன்றும்  புதிதல்ல – ஆச்சரியமானதுமல்ல.  எனவே,  ஃபத்வா (Fatwa)  குழுவின்  அபிப்பிராயத்தைப்  பெற்று மதச்சார்பற்ற  நீதிமன்றம்  ஒரு  முடிவுக்கு  வர  எந்தத்  தடங்களும்  இல்லை,  இருந்ததுமில்லை.

முர்தாட் ஆனாலும் ஷரியாவுக்கு செல்வது சரியா?   

s1 மற்றுமொரு  வழக்கில்  121(1A)      ஷரத்தை 1994இல்   வியாக்கியானம்  செய்தது  உயர்நீதிமன்றம்.  சூன்  சிங்குக்கும்  பெர்துபோஹான்  கெபாஜிக்கான்  இஸ்லாம்  மலேசியா (பெர்க்கிமுக்கும்)         (Soon  Singh  V. Pertubuhan  Kebajikan  Islam  Malaysia)  நடந்த  வழக்கில் சூன்  சிங்  பிறப்பிலிருந்து  சீக்கிய  ஆச்சாரப்படி  வளர்க்கப்பட்டவர்;  14.5.1988இல்  அவர்  இஸ்லாத்தைத்  தழுவி  தம்  பெயரையும்  மாற்றிக்கொண்டார்.  16.7.1992இல்  அவர்   மீண்டும்  சீக்கியச்  சமயத்தைத்  தழுவினார்.  27.7.1992ல்  தாம்  இஸ்லாத்தைத்   துறந்துவிட்டதாக சத்தியப்  பிரமானம்  செய்து  பிரகடனப்படுத்தினார். தாம்   இஸ்லாத்தைத்  தழிவியபோது  பதினெட்டு  வயதை   அடையவில்லை  என்றும்  குறிப்பிட்டார்.  சூன்  சிங் தொடுத்த   வழக்கில்  தாம்  முஸ்லிம் அல்ல   என்று  பிரகடனப்படுத்தும்படி  உயர்  நீதிமன்றத்தை   வேண்டினார்.

பெர்க்கிம்  முன்வைத்த  ஆட்சேபனை  என்னவெனில்,  121(1A)  ஷரத்தின்படி   மதச்சார்பற்ற  உயர்நீதிமன்றத்துக்கு  இந்த  வழக்கை  விசாரிக்கும்  அதிகாரம்  இல்லை  என்பதாகும்.  இதன்  அடிப்படையில்  சூன்  சிங்கின்  மனு  நிராகரிக்கப்பட்டது.  பெர்க்கிம்  முன்  வைத்த  ஆட்சேபனையைச்  செவிமடுத்த  நீதிபதி,  சூன்  சிங்  இஸ்லாத்தைத் துறந்துவிட்டார்  என்பதை முடிவு  செய்யும் அதிகாரத்தை  ஷரியா   நீதிமன்றம்  மட்டும்தான்  பெற்றிருக்கிறது  என்பதால் சூன்  சிங்  அந்த  நீதிமன்றத்துக்கே போக  வேண்டும்  என்று  தீர்ப்பளித்தார்.

சமயம் என்பது தனிநபரின் மார்கமா? அரசாங்கத்தின் கட்டாயமா?  

s3இங்கே  கவனிக்க  வேண்டிய  விஷயம்  என்னவென்றால்  சமயவழிபாடு  என்பது  ஒருவரின்  மனதை  பொறுத்தது.  ஒருவர்  தம்  மனதில்  எதை,  எப்படி  நினைக்கிறார்  என்று  பிறர்  சொல்வது,  கணிப்பது  கடினம்.  உயிரோடு  இருப்பவர்  தாம்  ஒரு  மார்க்கத்தைப்   பேணுவதாகச்   சொன்னால் அதைவிட  சான்று  வேறு  எதுவும்  தேவை   இல்லை.  ஒருவரின்  மனநிலை  எப்படி  இயங்கிக்   கொண்டிருக்கிறது   என்பதை   வெளிப்படுத்தும்   ஆற்றல்  அந்த  நபருக்கே   உண்டு.  சட்டப் பூர்வமாக ஒருவரின் மனநிலை   எப்படி   செயல்பட்டது  என்பதை  நிர்ணயிக்க  அவர் நடந்து  கொள்ளும் முறை,  கையாண்ட வாழ்க்கை  முறை போன்ற சான்றுகள்  உதவலாம்.  ஆனால்  அவை  முடிவானவை  என்று சொல்வதற்கில்லை என்றாலும்,  மதச்  சம்பந்தமான  விஷயங்களில்  அவர்   வெளிப்படையாகச் சொல்வதை ஏற்றுக்  கொள்ளப்பட வேண்டும்.

ஒருவர்  இஸ்லாத்தை   விட்டு  விளகிப்  போனால்  அவரை  முர்தாட் (Murtad)  என்று  சொல்லப்படும்.  அதாவது  இஸ்லாத்தை  விட்டுப்  போனவர்.  அப்படியானால்  தம்  வாழ்நாளில்  அந்தச்  சமயத்தைத்  துறந்தவர்  முஸ்லிமாகக்  கருதமுடியாது.  அவர்  முர்தாட்.  எனவே,  ஷரியா   நீதிமன்றத்துக்கு  அவர்  மீது அதிகாரம்  செலுத்த முடியாது  என்றும்  சொல்லலாம்  அல்லவா?

 அரசியலமைப்பின் உத்திரவாதம் என்னானது?

அதோடன்றி,  அரசியலமைப்புச்  சட்டத்தின்  11(1)ஆம்  ஷரத்து  கொடுக்கும்  உத்திரவாதத்தை  கவனிக்க  வேண்டும்.  எந்த  ஒரு  நபரும்  தன்  மதத்தை  பேணவும்  அதைப் பரப்பவும்  உரிமையுண்டு  என்று  அது  சொல்கிறது.  11(4)ஆம்  ஷரத்து,  பிற  சமயங்களின்   போதனையை  அல்லது  நம்பிக்கையை  முஸ்லிம்களிடையே  பரப்புவதைக்  கட்டுப்படுத்தவோ  அல்லது  வரையறுக்கவே   மாநிலங்கள்  சட்டம்  இயற்றலாம்   என்கிறது.  எனவே,  இஸ்லாத்தைத்   துறப்பவர்கள்  மீண்டும்  ஷரியா   நீதிமன்றத்தின்   அங்கீகாரத்தைப்   பெற்றாக   வேண்டும்  என்ற  சட்டம்   அரசியலமைப்புச்   சட்டத்திற்குப்   புறம்பாக   இருக்கிறது  என்றால் அது  தவறில்லை.  இப்படிப்பட்ட  சூழ்நிலையில்   மதச்சார்பற்ற  நீதிமன்றங்களை  ஒருவரின்   சமயத்தைப்  பற்றி  தீர்மானிக்கும்   தகுதியும்  அதிகாரமும்  பெற்றிருப்பதைக்   காணமுடிகிறது.

சூன் சிங்கின்  வழக்கை  விசாரித்த உயர்  நீதிமன்ற   நீதிபதி,  டலிப்  கோர் வழக்கில்   தலைமை  நீதிபதி  ஹஷிம்  யோப்  ஸானி  கருத்தை  கவனத்தில்  கொள்ளாதது  துரதிர்ஷ்டமே.  உச்ச  நீதிமன்றத்தின்  தீர்ப்பு  புதுவிதமான  வியாக்கியானத்தை  அறிமுகப்படுத்தி  நாளடைவில்  பெரும்  சிக்கலுக்கு  துணைபோயிற்று.

சிவில் சட்டங்களை ஒடுக்க் முற்பட்டவர் அகமது  இப்ராஹீம்  

s2அரசியலமைப்புச்  சட்டத்தின்  121(1)ம்  ஷரத்தில்  கொண்டுவரப்பட்ட  திருத்தங்கள்  தேவையானவை  என  வாதிட்டவர்களில்  முக்கியமானவர் காலஞ்சென்ற  பேராசிரியர்  டாக்டர்  அகமது  இப்ராஹீம்  ஆவார்.

அவருடைய   கருத்துப்படி  மதச்  சார்பற்ற  உயர்  நீதிமன்றங்கள்  பல  வழக்குகளில்  இஸ்லாத்தின்   கோட்பாடுகளுக்கு  முரணான  தீர்ப்புக்களை  வழங்கியதைச்   சுட்டிக்காட்டி  ஷரியா  நீதிமன்றங்கள்  புதிதாகப்  பெற்றிருக்கும்  அதிகாரத்தைச்  செம்மையாகப்  பயன்படுத்த  வேண்டுமென்றார்.  அதோடு  ஷரியா  நீதிமன்றங்கள்  திறம்பட செயல்பட  வேண்டுமாயின்  மேலும்  பலச்  சட்டங்களை  ரத்துச் செய்யும்படியும்  அவர்  முன்மொழிந்தார்.  நல்ல  வேளையாக  கூட்டரசு  அரசு  அப்படி  ஒரு  காரியத்தைத்  தவிர்த்தது  போற்ற  வேண்டிய   செயலாகும்.

அகம்மது  இப்ராஹீம்  இஸ்லாமிய  சட்ட  நிர்வாகத்தைப்  பற்றி  விரிவாகக்   கருத்துரைத்தாரேயன்றி   பல்லினம்   வாழும்  மலேசியாவின்   உண்மையான  நிலையைக்   கிஞ்சித்தும்  சிந்தித்துப்   பார்த்ததாகச்   சொல்வதற்கில்லை.  அவருடைய  கருத்துகள்   ஒருதலைப்   பட்சமாக   அமைந்திருந்ததோடு  நியாயமான  நீதி    பரிபாலனத்திற்கு   உதவவில்லை  என்றுதான்  சொல்ல  வேண்டும்.

– தொடரும்.

பகுதி 1 – குழப்பத்திற்கு யார் காரணம்

பகுதி 2 –  உரிமையை பறிக்க அரசியல் சட்ட மாற்றம்

பகுதி 3வினையால் விளையப்போகும் கொடுமைகள்