ஸ்ரீ பிரிஸ்தானா விவகாரம்: கல்வி அமைச்சும், போலீஸ்சும் அம்னோவுக்கு ஆப்பு வைக்கின்றன

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஆகஸ்ட் 29, 2013. 

Dr-Xavier-Jeyakumarகடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா  தேசியப்பள்ளி மாணவர்கள்  குளியலறையில்  உணவு உட்கொண்ட விவகாரம், அம்னோவின்  இனவாதத்தையும் அதன்  அகந்தையையும் நாட்டு மக்களுக்கு உணர்த்துவதாக மட்டும் இல்லாமல், இனி அம்னோ தலைமைத்துவத்தால் நாட்டிற்கு எந்த நன்மையும் கிட்டாது என்பதைக் காட்டி வருகிறது.

 பண்பற்றவர் எப்படி தலைமையாசியராக்கப்பட்டார்?

மேலும், அம்னோவின்  இனவாதமும், அகங்காரமும் அரசாங்கத் துறைகளில் ஏற்படுத்தியுள்ள பிம்பங்களை நன்கு உணர்த்துவதாகவே சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளி விவகாரத்தின் மீது கல்வி அமைச்சும், போலீஸாரும் எடுத்து வரும் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அம்னோ எந்த அளவுக்கு அரசாங்கத் துறையில் இனவாதத்தைப் புகுத்தி வளர்த்து விட்டிருக்கிறது  என்பதற்கு இது  ஒரு சிறிய எடுத்துக் காட்டாகும்.

 

ஒரு தவறை எவர் செய்தாலும் அது  தவறுதான். எந்த மதத்தை, எந்த இனத்தைச் சார்ந்த மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்குச் சுகாதாரமான கௌரவமான ஓர் இடத்தை உணவு உட்கொள்ள வழங்குவது மனிதத் தன்மையாகும். இந்த அடிப்படையை  மதிக்காதவன்  மனிதனல்ல, அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதரல்லாத அல்லது மனிதப்பண்பு அறவே இல்லாத ஒருவரை, மனிதக் குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிக்கு எப்படித் தலைமை ஆசிரியராக ஆக்கினார்கள்?

 

அவர் செய்தது அடாத செயல் என்பதனை எல்லாச் சமூகமும் ஏற்றுக் கொண்டது, ஆனால் அது குறித்து  இன்றளவும் ஒரு முடிவான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள கல்வி அமைச்சு, அப்பிரச்சனையை மேலும் வளர்த்துக் கொண்டு செல்லும் காவல்துறைகளின்  செயல்கள் அனைத்தும் இன்றைய பாரிசான் ஆட்சியில் மலாய்க்காரர்  அல்லாதவர்கள் பாதுகாப்பு  அற்ற நிலையிலிருப்பதை நாட்டு மக்களுக்குத்  தெளிவாக  உணர்த்தியிருக்கிறது.

 

துணைப் பிரதமர் மொகைதின் இது குறித்து இதுவரை  எந்த அறிக்கையும் விடவில்லை, கல்வி அமைச்சரான அவர் தக்க நடவடிக்கை எடுக்கவும் தவறி விட்டார். இதேபோல் 2011ம் ஆண்டில் விஸ்பரூபம்  எடுத்த  இண்டலோக் நாவல் விவகாரத்திலும் கல்வி அமைச்சரான மொகைதின் அந்நாவலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஆனால்,  இந்தப் புத்தகத்தை  அகற்ற உத்தரவிட்ட அன்றைய துணை அமைச்சர் டி. முருகையா பதவியிலிருந்து  அகற்றப்பட்டதுதான் இந்தியர்களுக்குக் கிடைத்த பாடம்.

முகைதினின் தலைமைத்துவத்தில் எதிர்காலம்!

இன்றும் சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளி விவகாரத்தில்  நடந்து கொண்டிருப்பது  அதுதான். அந்தப்பள்ளி ஏற்படுத்தியmuhai விவகாரத்தால் இந்நாட்டுக்கும், மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை; அதே வேளையில் நாட்டுக்குப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தியதுடன்  மக்களிடையே வேறுபாட்டை வளர்த்து வருகிறது, ஆனால் கல்வி இலாக்காவும், போலீசாரும் பள்ளியில் மாணவர்களின்  பெற்றோர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

அனைத்து இன மாணவர்களையும் ஒரேமொழி கல்விக்குத் தயார் செய்வதாகக் கூறிக் கொள்ளும் அம்னோ, மலாய்க்காரர்  அல்லாத மாணவர்களுக்கு எதிராக ஸ்ரீ பிரிஸ்தானா தலைமையாசிரியர் எடுத்த விரும்பத்தகாத நடவடிக்கை அதன் கொள்கைக்கு எதிராக மேற்கொண்ட செயல் என்பதனை ஏன்  புரிந்துக் கொள்ள வில்லை? இதனால், நாட்டின் கல்விக் கொள்கை அமலாக்கம் 20 ஆண்டுகள் பின் தள்ளப்பட்டு விட்டது என்ற சாதாரண  உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளச் சத்தியற்ற ஒருவர் கல்வி அமைச்சராக இருப்பது மிகப் பெரிய வேடிக்கையாகும்.

 

அதைவிட பெரிய வேடிக்கை இந் நாட்டை இன்று  ஆட்சி புரியும் அம்னோவின் பிரதமருக்கான  எதிர்கால வேட்பாளர்  மொகைதின்  என்பதாகும். ஆக, சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா  தேசியப்பள்ளி விவகாரத்தைத் தனிப்பட்ட சமுதாய அல்லது பள்ளி விவகாரமாக நாட்டு மக்கள் பார்க்கவில்லை. அதனை இந்நாட்டின்  எதிர்கால  அரசியல் தலைமைத்துவ மற்றும்  அரசாங்கக் கொள்கை  அமலாக்கத்தின் முன்னோடியாகக் கவனித்து வருகின்றனர் என்பதனைப் பாரிசானும்  அம்னோவும் உணர வேண்டும்.

 

 

 

TAGS: