சரவாக் மாநிலத்தில் காசநோய் பாதிப்பு இன்னும் அதிக அபாயத்திலேயே உள்ளது – சுகாதாரத்துறை துணை அமைச்சர்

காசநோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக சரவாக் திகழ்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையில் பெரிய அளவில் அதிகரிப்பு காணப்படவில்லை என்று சுகாதாரத்துறை துணை அமைச்சர் ஹனிபா ஹஜார் தாயிப் தெரிவித்தார்.

சரவாக்கின் பாதிப்பு குறித்து அவர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், மற்ற பல மாநிலங்களை விட இங்கு பாதிப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், இது தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு காசநோய் பரவுவதைத் தடுப்பதற்காக, ஆரம்பக்கட்ட கண்டறிதல் மற்றும் சமூகக் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் இருமல், குறிப்பாக மாலை நேரங்களில் நீடிக்கும் காய்ச்சல், காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், உடனடியாக அருகிலுள்ள கிளினிக் அல்லது மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் அறிவுறுத்தினார்.

சுகாதார அமைச்சின் 2026-ஆம் ஆண்டின் ஆறாவது தொற்றுநோயியல் வாரத்திற்கான (பிப்ரவரி 14 வரை) தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 3,161 காசநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் சரவாக் மாநிலத்தில் 332 பாதிப்புகள் பதிவாகி, அந்த மாநிலம் நாட்டின் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

-fmt