போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் தேசிய அஞ்சல் மற்றும் பார்சல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 27-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் கூடுதல் கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தனது முகநூல் பதிவில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச ஏற்றுமதிகளுக்கு, அந்த பார்சலின் அடிப்படை விலையில் 40% எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
அனைத்து உள்நாட்டு பார்சல்களுக்கும், தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் கூடுதல் கட்டணத்துடன் கூடுதலாக 15% வசூலிக்கப்படும்.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகத்திற்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வழிவகுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மலேசியாவில் RON97 பெட்ரோல் மற்றும் மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 சென் உயர்ந்துள்ளது. மேலும், உலகளாவிய விலை உயர்வால் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 80 சென் அதிகரித்துள்ளது.
-fmt
























