“இன்னும் பலர் தற்போதுள்ள கடன் வசதிகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள் அல்லது அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.”
இன்று கோலாலம்பூரில் உள்ள தாமன் மலாவாத்தி உழவர் சந்தையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.
சிறு வணிகர்களுக்குக் கிடைக்கக்கூடிய கடன்கள் மற்றும் உதவிகள் குறித்து அவர்களுக்கு விளக்குவதற்காக, அரசு நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் நேரடியாகக் களமிறங்கி, அவர்களைத் தேடிச் சென்று அணுக வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
நிதி உதவி வசதிகள் பரவலாகக் கிடைக்கின்றன என்றும், ஆனால் பலருக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை அல்லது அவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்றும் காசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் (Khazanah Research Institute) அறிக்கை காட்டுவதாக அவர் கூறினார்.
“நான் பேங்க் சிம்பானான் நேஷனல் (BSN), தெக்குன் நேஷனல் (Tekun Nasional), பேங்க் ராக்யாட் (Bank Rakyat), அமானா இக்தியார் மலேசியா (Amanah Ikhtiar Malaysia), மஜ்லிஸ் அமானா ராக்யாட் (Mara) மற்றும் அக்ரோபேங்க் (Agrobank) போன்ற நிறுவனங்களுடன் நேரடியாகக் களமிறங்கிச் செயல்படுவது குறித்து விவாதித்துள்ளேன்.
வணிகர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்ல வேண்டாம்.
“அதிகப்படியான மக்கள் குறைந்த சேவைக்கட்டணங்களுடன் (ஏறக்குறைய ரிம 400) கடன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மக்களை நேரடியாகச் சென்றடைவதே இதன் நோக்கமாகும்,” என்று அவர் தாமான் மலாவாத்தி உழவர் சந்தைக்குச் சென்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
அன்வார் இப்ராஹிமின் கூற்றுப்படி, பல சிறு வணிகர்களுக்குத் தங்கள் தொழிலைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த ரிம 10,000 முதல் ரிம 20,000 வரை மட்டுமே தேவைப்படுகிறது.
சிறு வணிகர்களிடையே கடன் திருப்பிச் செலுத்தும் விகிதம் வலுவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாகப் பெண்களிடையே இது கிட்டத்தட்ட 100% ஆகவும், ஆண்களிடையே சுமார் 95% ஆகவும் உள்ளது.
“இந்த மக்கள் கடினமாக உழைக்கிறார்கள்; அவர்கள் அதிகம் புகார் கூறுவதில்லை. தொடர்ந்து புலம்புவதோ அல்லது முணுமுணுப்பதோ இல்லை… அது சில அரசியல்வாதிகளிடம் மட்டும்தான் உள்ளது,” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
கடந்த வாரம், 2026 ஆம் ஆண்டிற்காக 400,000-க்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் பயனடையும் வகையில் ரிம 5 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குறுநிதி (micro-financing) உதவித் தொகுப்பை அரசாங்கம் அறிவித்தது.
இந்த வசதியின் மூலம் ரிம 100,000 வரை கடன்கள் வழங்கப்படுகின்றன, மேலும் சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 4% என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளன.
























