ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11 மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல் ஆகஸ்ட் 1 நடைபெறும்

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு முறையே ஜூலை 11 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹாரூன் கூறுகையில், இம்மாத தொடக்கத்தில் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கல் ஜொகூரில் ஜூன் 27-லும், நெகிரி செம்பிலானில் ஜூலை 18-லும் நடைபெறும் என்றார்.

முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் நாள் ஜொகூருக்கு ஜூலை 7 என்றும், நெகிரி செம்பிலானுக்கு ஜூலை 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“பிரச்சாரக் காலம் 14 நாட்களுக்கு நீடிக்கும்; இது ஜொகூருக்கு ஜூலை 10 அன்றும், நெகிரி செம்பிலானுக்கு ஜூலை 31 அன்றும் இரவு 11.59 மணியுடன் நிறைவடையும்,” என்று இன்று இங்கு நடைபெற்ற தேர்தல் ஆணையக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ரம்லான் தெரிவித்தார்.

ஜொகூர் தேர்தலுக்கு தோராயமாக 86.8 மில்லியன் ரிங்கிட்டும், நெகிரி செம்பிலான் தேர்தலுக்கு 80.6 மில்லியன் ரிங்கிட்டும் செலவாகும் என்று அவர் கூறினார்.

ஜொகூரில் மொத்தம் 2.73 மில்லியன் வாக்காளர்களும், நெகிரி செம்பிலானில் 889,490 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஜொகூர் தேர்தலில் 42,971 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்; அங்கு 1,140 வாக்குச்சாவடிகளும் 4,980 வாக்குப்பதிவு வரிசைகளும்  அமைக்கப்படும். நெகிரி செம்பிலானில், 15,344 பணியாளர்கள் 439 வாக்குச்சாவடிகளையும் 1,738 வாக்குப்பதிவு வரிசைகளையும் நிர்வகிப்பார்கள்.

தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், வெளிநாட்டு மலேசியர்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட தகுதியுள்ள பிரிவினருக்கான தபால் வாக்கு விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ப, ஜூன் 19 முதல் ஜூலை 15 வரையிலான தேதிகளுக்குள் விண்ணப்பங்கள் வெவ்வேறு கட்டங்களாக நிறைவடையும்.

வேட்புமனுக்கள் சரிபார்ப்பை எளிதாக்க, வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுத் தாக்கல் படிவங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறும், சுமூகமான வேட்புமனுத் தாக்கல் செயல்முறையை உறுதி செய்ய வைப்புத்தொகையை  முன்கூட்டியே செலுத்துமாறும் ரம்லான் வலியுறுத்தினார்.

அரசு முகமைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) தேர்தல் பார்வையாளர்களாகப் பணியாற்ற வரவற்கப்படுவதாகக் கூறிய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி வரிசைகளின் நேரடி ஒளிபரப்பு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் வழியாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக, தேர்தல் ஆணையம் பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக நாடு தழுவிய அளவில் “ஜோம் கித்தா உண்டி” (Jom Kita Undi) பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.

 

 

 

 

-fmt