கட்டாயத் தொழிலாளர் நடைமுறை: அமெரிக்க வர்த்தக உறுதிமொழிகளை நிறைவேற்ற மலேசியாவுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது

மலேசியா-அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (agreement on reciprocal trade) அங்கீகரிக்கப்பட்ட பின்னர், கட்டாயத் தொழிலாளர் முறை மற்றும் அதிகப்படியான தொழில்துறை உற்பத்தித் திறன் தொடர்பான சட்ட இடைவெளிகளை சரிசெய்ய மலேசியாவுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் இருக்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்தார்.

தேவையான சட்ட மாற்றங்கள் குறித்து மனிதவள அமைச்சகத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ART ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்ட பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இது உடனடியாக செய்ய வேண்டிய ஒன்று அல்ல.

“ஒப்பந்தத்தை நாம் அங்கீகரித்த பிறகு, தற்போது இல்லாத சட்டங்களை சரிசெய்ய இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கிடைக்கும்,” என்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் (NCCIM) ஆண்டு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR), கட்டாயத் தொழிலாளர் முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் 60 வர்த்தக கூட்டாளி நாடுகளுக்கு புதிய வரிகளை விதிப்பதாக அறிவித்தது.

இந்த பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றது. மலேசியாவுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்பட்டது. சில நாடுகளுக்கு 12.5 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

USTR-ன் கூற்றுப்படி, கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடை செய்யும் உறுதிமொழிகளை கொண்டுள்ள அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருளாதாரங்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

முன்னாள் கிளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் குறித்த புகார்களுக்கு மடானி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், புதிய அமெரிக்க வரிகளால் மலேசியா பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக முன்பு எச்சரித்திருந்தார்.

போதுமான சட்டங்கள் இல்லை

மேலும் விளக்கமளித்த ஜொஹாரி, மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கான தற்போதைய சட்ட விதிகள் போதுமானதாக இல்லை என்று கூறினார்.

“மலேசியாவில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்க ஏற்கனவே சட்டங்கள் உள்ளன. ஆனால், மூன்றாம் நாடுகளில் கட்டாயத் தொழிலாளர் முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மலேசியாவுக்குள் மூலப்பொருட்களாக வந்து, இங்கு செயலாக்கப்பட்டு, பின்னர் மலேசிய தயாரிப்புகளாக ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டங்கள் நம்மிடம் இன்னும் இல்லை,” என்று அவர் கூறினார்.

இதேவேளை, அமெரிக்க வர்த்தகச் சட்டம் 1974-ன் பிரிவு 301 கீழ் நடைபெற்று வரும் அதிகப்படியான தொழில்துறை உற்பத்தித் திறன் தொடர்பான விசாரணையில் மலேசியாவுக்கு விதிக்கப்படும் வரி விகிதம் குறித்து இதுவரை புத்ராஜெயாவுக்கு தகவல் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“10 சதவீதம் என்பது கட்டாயத் தொழிலாளர் விவகாரத்துக்கானது. அதிகப்படியான உற்பத்தித் திறன் தொடர்பான விசாரணையில் எவ்வளவு வரி விதிக்கப்படும் அல்லது விதிக்கப்படுமா என்பதுகூட இன்னும் தெரியவில்லை”.

“அது தீர்மானிக்கப்பட்ட பிறகு, இரண்டும் இணைந்து மலேசியாவின் மொத்த வரி விகிதமாக அமையும்,” என்று ஜொஹாரி கூறினார்.

சமீபத்திய வரி அறிவிப்புக்கு பதிலளித்து, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு ஒன்றில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட சில வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பைத் தவிர்க்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த தீர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக, பிப்ரவரியில் டிரம்ப் 150 நாட்களுக்கு உலகளாவிய அளவில் 10 சதவீத அடிப்படை வரியை விதித்தார். அந்த நடவடிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், புதிய வரிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.