பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹரப்பானில் இணைய விரும்புவதாக எந்த அறிகுறியும் இல்லை – அன்வார்

பெர்சத்து கட்சி தங்களது கூட்டணியில் இணையக்கூடும் என்ற யூகங்களை பக்காத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார், மேலும் இதுவரை அதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பெர்சத்து கட்சிக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான உறவை பெர்சத்து கட்சி சீர்குலைப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம் சாட்டிய மூன்று வாரங்களுக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை பெர்சத்து உடனான தனது அரசியல் கூட்டணியை பாஸ் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே, பெர்சத்து மற்றும் பக்காத்தான் ஹரப்பான் இடையிலான உறவுகள் குறித்த யூகங்கள் வேகம் பெற்றன.

பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் நுழைய முற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமருமான அன்வாரிடம் கேட்டபோது, “இதுவரை அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை” என்று அவர் கூறினார்.

அரசியல் ஒத்துழைப்பு என்பது திடீர் முறிவுகள் அல்லது மாறிவரும் கூட்டணிகளால் வழிநடத்தப்படக் கூடாது.

அதோடு, ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு துரோகம் இழைப்பது போல் பார்க்கப்படும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஈடுபடுவதை தாம் விரும்பவில்லை என்றும் அன்வார் கூறினார்.

மாநில அளவில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டரசு மட்டத்தில் ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து வலுவாக இருப்பதாக பிகேஆர் தலைவரான அவர் தெரிவித்தார்

முன்னதாக மே 28 அன்று, பெர்சத்து கட்சி மீண்டும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவது குறித்து கட்சிக்குள் முறையான அல்லது முறைசாரா எந்தவொரு விவாதமும் நடத்தப்படவில்லை என்று பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசல் இஸ்மாயில் அஜிஸ் கூறியிருந்தார்.

பிப்ரவரி 2020-இல் பக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்ததில் முக்கியப் பங்காற்றிய பிறகு, பெர்சத்து கட்சி மீண்டும் பக்காத்தான் ஹரப்பான் உடன் கைகோர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் துன் ஃபைசல் கூறினார்.

 

 

 

-fmt