அன்வாரைக் விட்டு விலகும் எண்ணம் டிஏபி-க்கு இல்லை என லோக் திட்டவட்டம்

ஒற்றுமை அரசாங்கத்தில் தங்களின் தலைவர்கள் தொடர வேண்டுமா என்பது குறித்து டிஏபி  விரைவில் மதிப்பீடு செய்யவிருந்தாலும், பிரதமர் அன்வார் இப்ராகிமை ஆதரிப்பதில் கட்சி இன்னும் உறுதியாக இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, டிஏபி தலைவர்கள் தங்கள் அரசாங்கப் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்ய ஆகஸ்ட் 16-ஆம் தேதி அக்கட்சி ஒரு மாநாட்டை நடத்தவுள்ளது.

நேற்று இரவு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோக், சபா தேர்தலில் டிஏபி போட்டியிட்ட அனைத்து எட்டு இடங்களையும் இழந்த முழுமையான தோல்வியைப் புறக்கணிக்க முடியாது என்று கூறினார். இதில் ஆறு இடங்களை வாரிசான் கட்சியிடம் டிஏபி இழந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்களைச் சார்ந்தே ஒரு அரசியல் கட்சியின் வாழ்வாதாரம் உள்ளது என்றும், இதனால் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து டிஏபி தனது திசையை மறுமதிப்பீடு செய்வது அவசியம் என்றும் லோக் கூறினார்.

ஒரு அரசியல் கட்சி என்ற முறையில், தேர்தல் முடிவுகளுக்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும். எதுவுமே நடக்காதது போல நாம் நடித்தால், நாம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும், மக்களின் குரலுக்கு நாம் மதிப்பளிக்கவில்லை என்றும் மக்கள் கூறுவார்கள்.

ஆனால், அதற்காக நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுகிறோம் என்றோ அல்லது பிரதமரைக் கைவிடுகிறோம் என்றோ அர்த்தமல்ல. அது கண்டிப்பாக இல்லை, என்று அவர் ‘டைகர் ஷோ’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவு எதுவாக இருந்தாலும், அடுத்த பொதுத்தேர்தல் வரை டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கான தங்களது ஆதரவைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று போக்குவரத்து அமைச்சருமான லோக் இதற்கு முன்பு வலியுறுத்தியிருந்தார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கான தனது ஆதரவை டிஏபி வாபஸ் பெறாது என்றும், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய லோக், அரசாங்கத்தில் டிஏபி பங்கேற்றது சில சமரசங்களை உள்ளடக்கியது என்றும், இது கட்சியைத் தொடர்ச்சியான பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது என்றும் ஒப்புக்கொண்டார்.

அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றதில் இருந்து டிஏபி குறைவாக குரல் எழுப்புகிறது என்று விமர்சிக்கப்படுவதை ஏற்றுக்கொண்ட அதே வேளையில், ஐந்து அமைச்சர்களைக் கொண்டுள்ள அக்கட்சி அமைச்சரவையில் முக்கியப் பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுப்பி வருவதாக அவர் வலியுறுத்தினார்.

நாங்கள் அமைச்சரவையில் பேசுகிறோம், ஊடகங்கள் வாயிலாக அல்ல. ஆனால் அமைச்சரவைக் கூட்டங்கள் ரகசியமானவை என்பதால், அங்கு என்ன விவாதிக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரிவதில்லை, என்று அவர் கூறினார்.

நாம் அரசாங்கத்தில் நீடிக்க விரும்பினால், அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும் அந்த தளத்தின் மூலமாக மக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.

ஆனால் நாம் வெளியில் இருந்து கொண்டு விமர்சிக்கவோ அல்லது நமது குரலை ஒலிக்கச் செய்யவோ மட்டுமே விரும்பினால், நாம் அரசாங்கத்தின் பதவிகளில் இருந்து வெளியேற வேண்டும், என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

-fmt