மீண்டும் பிகேஆர் கட்சியில் இணைவதாக முன்னாள் அமைச்சர் சேவியர் ஜெயகுமார் அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், ஓரங்கட்டப்பட்டதாக உணரும் கட்சியின் மூத்த தலைவர்களை மீண்டும் கட்சிக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே, கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தான் மீண்டும் கட்சியில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளார். பிகேஆர் கட்சிக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கேட்கப்பட்டபோது, சேவியர் “ஆம்,” என்று பதிலளித்தார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தேசிய மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையில், அன்வார் கட்சியின் மூத்த தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், அவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பி அதன் சீர்திருத்தப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் பிகேஆர் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போதைய பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவளிப்பதற்காக சேவியர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக மாற அக்கட்சியிலிருந்து விலகினார்.

பின்னர் 2022-இல், அவர் பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணைந்தார். ஆனால், அவர் ஏன் அந்தப் புதிய கட்சியில் இணைந்தார் என்ற காரணத்தை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், முன்னாள் துணைத் தலைவர் தியான் சுவா மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிகேஆர் கட்சியின் செய்தி ஊடகமான சுவாரா கெஅடிலான் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக ரிபார்மசி இயக்கத்தில் தொடர்புடைய கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் இம்முடிவை வரவேற்றுள்ளனர். நாளிதழின் தகவல்படி, கடந்த 2022 பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டதற்காக தியான் சுவா பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் 10 முனைப் போட்டிக்கு இடையே பிகேஆர் கட்சியின் பி. பிரபாகரன் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

-fmt