செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை, மாதத்திற்கு 800kWh அல்லது அதற்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் உள்ளூர்/வீட்டு வாடிக்கையாளர்களுக்கு AFA கட்டணம், ரிம 10 சில்லறை கட்டணம் (retail charge) மற்றும் 8% சேவை வரியிலிருந்து (service tax) முழு விலக்கு அளிக்கப்படும்.
TNB, வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை திறம்பட பயன்படுத்தும் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அதிகபட்ச சேமிப்பைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தெனாகா நேஷனல் பெர்ஹாட் (Tenaga Nasional Bhd) வாடிக்கையாளர்களில், மாதம் 800 கிலோவாட்-மணிநேரம் (kWh) வரை மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள், செப்டம்பர் மாத கட்டணச் சரிசெய்தலுக்கான விகிதாசாரக் கடன்தொகையை (pro rata credit) பெறுவார்கள். இத்தொகை அவர்களின் அக்டோபர் 2026 மின்சாரக் கட்டணத்தில் நேரடியாகச் சேர்க்கப்படும்.
உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு வரம்பை மாதத்திற்கு 600 kWh-லிருந்து 800 kWh ஆக உயர்த்தும் அரசாங்கத்தின் செப்டம்பர் 17 அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை மாதத்திற்கு 800 kWh அல்லது அதற்குப் குறைவாகப் பயன்படுத்தும் உள்நாட்டு வாடிக்கையாளர்கள், தானியங்கி எரிபொருள் சரிசெய்தல் கட்டணம் (automatic fuel adjustment charge), ரிம10 சில்லறை விற்பனைக் கட்டணம் மற்றும் 8% சேவை வரி ஆகியவற்றிலிருந்து முழு விலக்கைப் பெறுவார்கள்.
சரிசெய்யப்பட்ட தொகையானது வாடிக்கையாளர்களின் மின்சாரக் கட்டணத்தில் ‘கட்டணச் சரிசெய்தல் (செப்டம்பர் 2026)’ மற்றும் ‘சேவை வரிச் சரிசெய்தல் (8.0%) (செப்டம்பர் 2026)’ ஆகிய விவரங்களின் கீழ் காண்பிக்கப்படும் என்று TNB இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், சேமிப்பை அதிகப்படுத்த வாடிக்கையாளர்கள் ஆற்றல் திறனைக் கூட்டும் முறைகளைப் (energy efficiency measures) பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள வளாகங்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள், தங்கள் அன்றாடப் பயன்பாட்டை 25 kWh-க்குக் கீழாகப் பராமரிக்கவும், மின்கட்டண வரம்பை ரிம 328-க்குக் குறைவாக நிர்ணயிக்கவும் myTNB செயலியைப் பயன்படுத்தி தினசரிப் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஏசியின் வெப்பநிலையை 24°C முதல் 26°C வரை அமைப்பது, டைமர் வசதியைப் பயன்படுத்துவது மற்றும் அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனங்களைப் பயன்படுத்த ஆஃப்-பீக் (off-peak) நேரத்திற்கு மாறுவது போன்ற ஆற்றல் திறன் உத்திகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
























