சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மஞ்சோங் மாவட்டக் காவல் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இன்று லுமுட்டில் உள்ள மடானி எஸ்பிளனேட் விங்(Madani Esplanade Wing) பொழுதுபோக்குப் பூங்காவில், கரையை மோதி விபத்துக்குள்ளான எண்ணெய் தாங்கிக் கப்பல்.
இன்று லூமுட்டில் (Lumut) உள்ள மடானி எஸ்பிளனேட் விங் (Madani Esplanade Wing) பொழுதுபோக்குப் பூங்காவின் தடுப்புச் சுவரில் மோதிய எண்ணெய்க் கப்பல், சரக்குகள் ஏதுமில்லாத (unladen) கப்பல் என்றும், அது அனுமதியின்றி கடல் சோதனை ஓட்டத்தில் (sea trial) ஈடுபட்டிருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் இன்று காலை 9.50 மணியளவில் ‘த்ரெட்ஸ்’ (Threads) சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவின. அதில் கப்பலும், தடுப்புச் சுவரின் ஒரு பகுதியும் சேதமடைந்திருப்பது பதிவாகியுள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இதில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்றும் மஞ்சோங் (Manjung) மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாக பெர்னாமா (Bernama) செய்தி வெளியிட்டுள்ளது.
10 தாய்லாந்து நாட்டு மாலுமிகளைக் கொண்டிருந்த அந்தக் கப்பல், முன்னதாக ‘புஜி’ (Fuji) என்று அழைக்கப்பட்டது என்றும், புதிய தாய்லாந்து உரிமையாளருக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும், தாய்லாந்தில் ‘மிடாஸ்’ (Midas) என்ற பெயரில் அது மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“சம்பந்தப்பட்ட முகமைகளிடம் முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி பெறாமல், நேற்றிரவு அந்தக் கப்பல் கடல் சோதனை ஓட்டத்திற்காகப் புறப்பட்டுச் சென்றதாக கடல்சார் துறையின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன,” என்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் ஹஸ்புல்லா இன்று தெரிவித்தார்.
அவருடன் பேராக் மாநில மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் (MMEA) இயக்குநர் ஜைனுதீன் சுகி மற்றும் பேராக் உதவி கடல்சார் அதிகாரி பஸ்லென் அப்துல்லா ஆகியோரும் உடனிருந்தனர்.
கப்பலின் பதிவு ஆவணங்கள், இயக்க அனுமதிகள் மற்றும் பயணப் பதிவுகளை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக ஹஸ்புல்லா குறிப்பிட்டார்.
2,400 டன் எடையும் 83 மீட்டர் நீளமும் கொண்ட அந்தக் கப்பல், விசாரணைகள் முடியும் வரை கடல் அலைகளின் நிலைக்கு ஏற்ப பொருத்தமான இடத்தில் தற்காலிகமாக நங்கூரமிடப்படும்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் மஞ்சோங் காவல்துறையை 05-688 6222 என்ற எண்ணிலோ அல்லது 017-682 8005 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு ஹஸ்புல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
























