பெரிக்காத்தான் நேஷனலைப் புதிய வியூகக் கூட்டாளி என ஜாஹிட் அறிவிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைத் தனது “புதிய வியூகப் பங்காளி” என்று பாரிசான் நேஷனல் தலைவர் அகமது ஜாஹிட் ஹமிடி வர்ணித்துள்ளார்.

மலாய் ஒற்றுமையை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்த இந்த இரு கூட்டணிகளும், ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுவதில்லை என்ற தேர்தல் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன. இதனைத் தொடர்ந்து, மாநிலச் சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது; இதில் பாரிசான் நேஷனல் 21 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் மூன்று இடங்களையும் வென்றன.

மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் உட்பட, மலேசியர்களிடையே மேலதிக ஒற்றுமை ஏற்படுவதற்கு இந்தத் தேர்தல் வெற்றி ஒரு தொடக்கமாக அமையும் என்று தாம் நம்புவதாக ஜாஹிட் தெரிவித்தார்.

கடந்தகாலக் கசப்புகளை மறந்துவிடுவோம். நமது அரசியல் பின்னணிகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைவோம்,” என்று கூட்டணியின் வெற்றியை அறிவித்த பின்னர் இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். “இந்த நீல அலை நாடு முழுவதும் தொடர்ந்து வீசட்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாரிசான் நேஷனல் கூட்டணியின் “புதிய வியூகப் பங்காளி” என்று தாம் வர்ணித்த பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஜாஹிட் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் கிழக்கு மலேசியக் கட்சிகளுடன் இணைந்து மத்திய ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியில் பாரிசான் நேஷனல் அங்கம் வகிக்கிறது; அதே நேரத்தில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆணிவேராக விளங்கும் பாஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

2019-ஆம் ஆண்டில் பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளுக்கிடையேயான ‘முவாஃபகாத் நேஷனல்’ கூட்டணி முறிந்த ஓராண்டுக்குப் பிறகு, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளால் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி உருவாக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மாநிலச் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஜூலை மாதம் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெற்ற வெற்றியையும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து பெற்ற மற்றொரு வெற்றியையும் தொடர்ந்து, பாரிசான் நேஷனல் தனது வெற்றிப் பயணத்தை இதன் மூலம் வலுப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள இந்த வெற்றி பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு உத்வேகம் அளிக்கும் என்று தாம் நம்புவதாக அம்னோ  தலைவருமான ஜாஹிட் தெரிவித்தார்.

 

 

-fmt