போட்டியிட்ட ஏழு இடங்களிலும் பெர்சத்து படுதோல்வி

மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பெர்சத்து (Bersatu) கட்சி தோல்வியடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அக்கட்சி இத்தேர்தலில் முழுமையாகத் துடைத்தெறியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியான பெர்சத்து, கூட்டணியின் தலைமைக் கட்சியான பாஸ்  உடனான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, மீண்டும் தனது சொந்தக் கொடியின் கீழ் தனித்துப் போட்டியிட்டது. இதன் விளைவாக, நெகிரி செம்பிலான் தேர்தலில் சந்தித்த மோசமான தோல்வியை இம்முறையும் அக்கட்சி மீண்டும் சந்திக்க நேரிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான அக்கட்சி, கிளேபாங் (Kelebang) தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மேலவைத் துணைத் தலைவர் அலி முகமது உட்பட ஏழு வேட்பாளர்களைக் களமிறக்கிய போதிலும், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறத் தவறிவிட்டது.

தேர்தல் உடன்படிக்கை இருந்தபோதிலும், பெர்சத்து கட்சி மூன்று தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் நேரடியாக மோதியது. இருப்பினும், குறிப்பாக ஆயர் குர, கிளேபாங் (Kelebang) மற்றும் பெங்காலான் பத்து ஆகிய தொகுதிகளில், பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குச் செல்லக்கூடிய மலாய் வாக்குகளைப் பிரித்து, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான ஒரு வியூக நடவடிக்கையாகவே அரசியல் ஆய்வாளர்கள் இதனைப் பார்க்கின்றனர்.

கலப்புத் தொகுதியான தனது கோட்டையை டிஏபி தக்கவைத்துக் கொள்ளும் நிலையில் உள்ள ஆயர் குரோ தொகுதியில் இந்த வியூகம் பலனளித்திருக்கலாம். ஆனால், கிளேபாங்  மற்றும் பெங்காலான் பத்து ஆகிய இரு தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றுள்ளதால், அங்கு இத்திட்டம் எதிர்பார்த்த பலனைத் தரத் தவறிவிட்டது.

மேலும், லெண்டு, சுங்கை உடாங், பந்தாய் குண்டோர் மற்றும் பெம்பான் ஆகிய மற்ற நான்கு தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகளுக்குப் பெர்சத்து கட்சியால் பெரிய அளவில் சவால் விடுக்க முடியவில்லை; அத்தொகுதிகளில் அக்கட்சி ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையும் நிலையில் உள்ளது.

நெகிரி செம்பிலான் தேர்தலில் அக்கட்சியின் ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே தனது தேர்தல் வைப்புத் தொகையைத் தக்கவைத்துக் கொண்ட நிலையில், இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறும் நிலையில் இருப்பதே அக்கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரே ஆறுதலாகும்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து பெர்சத்து கட்சி வெளியேறும் விளிம்பில் உள்ள நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைத் திட்டமிடுவதற்கு அக்கட்சிக்கு அதிக அவகாசம் இல்லை; அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சி முழுமையாகத் துடைத்தெறியப்படலாம் என்ற அபாயமும் அதிகரித்து வருகிறது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உட்பட மற்ற தரப்பினருடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அக்கட்சி வலியுறுத்தி வந்தாலும், 2020 பிப்ரவரியில் நடந்த ‘ஷெரட்டன் நகர்வு’ ஏற்படுத்திய அரசியல் வடுக்கள் காரணமாக, பெர்சத்து கட்சியுடன் மீண்டும் கைகோர்ப்பதற்கு டிஏபி தலைவர்கள் வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

முஹிடின் மற்றும் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி உள்ளிட்டோர் முன்னெடுத்த அந்தச் சர்ச்சைக்குரிய அரசியல் மாற்றமே, 2020-ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மத்திய அரசாங்கம் கவிழ்வதற்குக் காரணமாக அமைந்தது.

 

 

 

-fmt