கொள்கை வகுப்பதில் மலாய் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டால்தான் அரசியல் ரீதியாகத் தொடர்ந்து செல்வாக்குடன் இருக்க முடியும் என்ற குற்றச்சாட்டை பிரதமர் அன்வார் நிராகரித்துள்ளார்.
அனைத்து மலேசியர்களுக்கும் நீதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவதிலேயே நாட்டின் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் தங்கியுள்ளன என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அனைத்து மலேசியர்களுக்குமான தலைவராகத் தொடர்ந்து இருக்கவே தாம் விரும்புவதாகக் கூறியுள்ள அன்வார் இப்ராஹிம், தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மலாய் மேலாதிக்கக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
அரசியல் ரீதியாகத் தொடர்ந்து முக்கியத்துவம் பெற வேண்டுமானால், நாட்டின் கொள்கைகள் மலாய் மேலாதிக்கத்துக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்று சில தரப்பினர் கூறிவரும் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அன்வார், நீங்கள் மலாய் மக்களின் நலன்களையும் மேலாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்களால் அரசியலில் நீடிக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.
அதற்கு எனது பதில், இந்த நாட்டை நேசிக்கும் ஒரு மலேசியத் தலைவராகவே நான் தொடர்ந்து இருக்க விரும்புகிறேன் என்பதாகும் என்று இங்கு பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
மலாய் மொழியின் நிலை, இஸ்லாம், மலாய் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் உள்ளிட்ட நாட்டின் அடிப்படைக் கொள்கைகளையும் கூட்டாட்சி அரசியலமைப்பையும் தாம் தொடர்ந்து பாதுகாக்க விரும்புவதாக அன்வார் கூறினார்.
எனினும், அனைத்து மலேசியர்களுக்கும் நீதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவதில்தான் நாட்டின் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் தங்கியுள்ளன என்பதை அவர் வலியுறுத்தினார்.
இன வேறுபாடின்றி அனைத்து மக்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தும் வகையில் நாட்டின் செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும், வறுமை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே உரித்தான பிரச்சினை அல்ல என்றும் அவர் கூறினார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான் மற்றும் கடசான் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் வெற்றிகரமானவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அன்வார், அதேவேளை ஒவ்வொரு சமூகத்திலும் வறுமை நிலவுவதாகவும், அதற்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சில தரப்பினர் இன விவகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக அன்வார் குற்றஞ்சாட்டினார். தங்களது சமூகங்களின் இருப்பைப் பாதுகாப்பது குறித்து உரக்கப் பேசும் சிலர், நாட்டின் மிகப் பெரும் செல்வந்தர்களில் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“உண்மையில், அவர்களின் போராட்டம் தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் மேலும் செல்வந்தர்களாக்கிக் கொள்வதற்கானதே,” என்று அவர் கூறினார்.
ஒளித் திருநாளான தீபாவளி, இருளை ஒளி வெல்லும் வெற்றியைக் குறிக்கிறது என்றும், சமூகத்தில் நீதி, நியாயம் மற்றும் உயர்ந்த அறநெறி விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய சமூகத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். குறிப்பாகக் கல்வி, தமிழ்ப்பள்ளிகள், இந்துக் கோவில்கள், வணிகர்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் வாழும் இந்தியர்களிடையே நிலவும் வறுமை ஆகியவை இதில் அடங்கும் என்றார்.
புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகக் குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், வரும் ஜனவரி மாதம் பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரிம 200 நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அனைத்து சமூகங்களுக்கும் உதவ அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த உதவி இனம் அல்லது மாவட்ட வேறுபாடின்றி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
























