தேசிய தினத்தை முன்னிட்டு மலேசியாவும் இந்தோனேசியாவும் புகைமூட்ட  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளன

இந்தோனேசியா தனது வான்வெளியில், மலேசியா மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் கூறுகையில், இந்தோனேசியா உதவி கோரினால், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு உட்பட்டு, தீயணைப்பு நடவடிக்கைகளில் உதவ மலேசியா தயாராக உள்ளது என்றார்.

மலேசியாவும் இந்தோனேசியாவும் எல்லை தாண்டி பரவும் புகைமூட்டத்தை (haze) சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், காற்றின் தரத்தைப் பாதுகாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. குறிப்பாக, தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப், இன்று இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜும்ஹூர் ஹிதாயத்துடன் தொலைபேசியில் பேசியபோது இந்த உறுதிப்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

“அக்டோபர் மாதத்திற்குள் எல் நினோ (El Niño) தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தென்மேற்கு பருவமழைக் காலத்துடன் இணைந்து வருவதால், இரு நாடுகளும் தீ ஏற்படுவதைத் தடுப்பதற்கும், தீ ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முழுமையாக உறுதிபூண்டுள்ளன,” என்று பெர்னாமா அவரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள  டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெற உள்ளது. அதேவேளை, மலேசிய தினக் கொண்டாட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி சரவாக்கின் கூச்சிங்கில் நடைபெறவுள்ளது.

மலேசியாவின் மேக விதைப்பு (cloud seeding) விமானங்கள் இந்தோனேசிய வான்வெளிக்குள் நுழைந்து, இரு நாடுகளின் பகிரப்பட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள இலக்கு இடங்களில் மேக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தோனேசியா அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியதற்காக குருப் மலேசிய அரசின் நன்றியைத் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) மற்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை, இந்தோனேசிய ஆயுதப் படைகளுடன் தங்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான கால அட்டவணையைத் தயாரித்து வருகின்றன.

இந்தோனேசியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் தீயணைப்பு உதவி தேவைப்பட்டால், அமைச்சரவை ஒப்புதலுக்கு உட்பட்டு மலேசியா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, நான்கு மாநிலங்களில் உள்ள 10 பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (API) “ஆரோக்கியமற்றது” என்ற அளவைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் சரவாக்கின் செரியான் பகுதியில் 197 என்ற அதிகபட்ச குறியீடு பதிவாகியுள்ளது. இது “மிகவும் ஆரோக்கியமற்ற” காற்றுத் தரத்திற்கான வரம்பை நெருங்கியுள்ளது.