சுக்மா போட்டியில் சிலாங்கூர் வெற்றி: செப்டம்பர் 1ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

மலேசிய விளையாட்டுகளில் (சுக்மா) 2026-இல் சிலாங்கூர் மாநிலம் ஒட்டுமொத்த சாம்பியனாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ஆம் தேதி சிறப்புப் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்தார்.

மாநிலத்தின் இந்த வெற்றிக்குக் காரணமான விளையாட்டாளர்கள், அதிகாரிகள், தொண்டூழியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.

இங்குள்ள அனேகா வாக் தளத்தில் நடைபெற்ற சுக்மா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் பேசிய அவர், “இப்போட்டிகள் முழுவதும் உதவிய ஒவ்வொரு விளையாட்டாளர், அதிகாரி, தொண்டூழியர் மற்றும் பெற்றோருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கும் அடையாளமாக, செப்டம்பர் 1ஆம் தேதி சிலாங்கூர் மக்களுக்கு ஒரு சிறப்பு பொது விடுமுறையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்று கூறினார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுதீன் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

101 தங்கம், 73 வெள்ளி மற்றும் 71 வெண்கலப் பதக்கங்களை வென்று சிலாங்கூர் முதலிடத்தைப் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து கூட்டரசு பிரதேசங்கள் 51 தங்கம், 54 வெள்ளி மற்றும் 52 வெண்கலப் பதக்கங்களுடன் அடுத்த இடத்தைப் பிடித்தன.

சுக்மா என்பது வெறும் போட்டி மட்டுமல்ல, இளம் விளையாட்டாளர்கள் தங்களுக்குள் கருத்துகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நிகழ்வு என்று அமிருடின் கூறினார்.

வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது.

இதுவே மலேசியனாக இருப்பதன் உண்மையான அர்த்தம், என்று அவர் கூறினார்.

சுக்மா போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் நேற்று வரை நடைபெற்றன.

 

 

 

-fmt