38 வயதான கைதி, சக கைதிகளால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட மண்ணீரல் (spleen) வெடிப்பால் உயிரிழந்தார்.
காவல்துறையினர் கூறுகையில், மாராங் சிறையில் ஏற்பட்ட மோதல் பழைய கடன் பிரச்சினையாலும், உயிரிழந்த நபர் குறித்து சந்தேகநபர்களுக்கு இருந்த அதிருப்தியாலும் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
38 வயதான மராங் சிறைச்சாலை கைதி ஒருவர், பழைய கடன் விவகாரம் தொடர்பாக சக கைதிகளால் தாக்கப்பட்டதில் நேற்று உயிரிழந்தார்.
மராங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சோபியான் ரெட்சுவான் கூறுகையில், நேற்று மதியம் 12.31 மணியளவில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறைச்சாலை வார்டன் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதற்குள் அந்தக் கைதி மெர்ச்சாங் சுகாதார நிலையத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோலா திரெங்கானுவில் உள்ள சுல்தான் நூர் சாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், குத்துகள் அல்லது உதைகளால் ஏற்பட்ட கடுமையான தாக்குதலின் காரணமாக மண்ணீரல் (spleen) வெடித்து, அதனால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
“இறந்தவரைத் தாக்கியதாக மூன்று கைதிகள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் பழைய கடன் விவகாரம் மற்றும் இறந்தவரின் மீது அந்த சந்தேக நபர்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாக ஏற்பட்டது தெரியவந்துள்ளது,” என்று சோபியான் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு மலேசிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
























