சமீபத்தில் கங்காரில் இடிக்கப்பட்ட இந்து கோவில் தொடர்பான சிவில் வழக்கை எதிர்கொள்ளத் தயார் என பெர்லிஸ் மந்திரி பெசார் அபூ பக்கர் ஹம்சா தெரிவித்துள்ளார். 1965-ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டத்தின் கீழ், அந்தக் கோவிலை இடிப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்குகள் தொடரப்படுவது சாதாரணமான ஒன்றுதான். மாநில அரசைப் பொறுத்தவரை, நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். இது எங்களுடைய நிலம், எனவே எங்கள் தரப்பு நியாயத்தை நாங்கள் பாதுகாப்போம், என்று அவர் கூறினார்.
அனுமதியின்றி அரசு நிலத்தில் அமைந்திருந்த ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், பல ஆண்டு அறிவிப்புகளுக்குப் பிறகு பெர்லிஸ் அதிகாரிகளால் ஆகஸ்ட் 20 அன்று இடிக்கப்பட்டது. கோவில் கமிட்டியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரே இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 20-ஆம் தேதி கோவில் இடிக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, பெர்லிஸ் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராகக் கோவில் கமிட்டி சிவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. மேலும், டிசம்பர் 31 வரை கோவில் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மந்திரி பெசார் அபு பக்கர் உறுதியளித்திருந்ததாகக் கமிட்டி தலைவர் பி. சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-fmt
























