மியான்மர் அகதிகளுக்கான புதிய குடியிருப்புகளின் அடிக்கல் நாட்டு விழாக்கள் எதிலும் தாம் கலந்துகொள்ளவோ, அவற்றைத் தொடங்கி வைக்கவோ அல்லது அவற்றில் ஈடுபடவோ இல்லை என்று முன்னாள் கூட்டாட்சிப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மறுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த அவதூறுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை என்றும், தமக்கும் ஒரு நபருக்கும் இடையே உள்ள ஒரு புகைப்படத்தை ஒருபோதும் நடக்காத ஒரு சம்பவத்துடன் தொடர்புபடுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அதில் உள்ள நபரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவருடன் எனக்கு அதிகாரப்பூர்வமான அல்லது அதிகாரப்பூர்வமற்ற எந்தவொரு தொடர்போ அல்லது கொடுக்கல் வாங்கலோ கிடையாது, என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அந்தப் புகைப்படம், 2025 ஆகஸ்ட் 12 அன்று தலைநகரில் நடைபெற்ற ‘ஆசியான் நிலையான நகரமயமாக்கல் மன்றம்’, ‘ஆசியான் ஆளுநர்கள் மற்றும் மேயர்களின் மன்றம்’) மற்றும் ‘ஆசியான் தலைநகரங்களின் ஆளுநர்கள் மற்றும் மேயர்களின் சந்திப்பு 2025’ ஆகிய நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
அந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றவும், அதனைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் (Fadillah Yusof) தொடங்கி வைத்த அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவும் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஜாலிஹா கூறினார்.
அந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்பாளர்களாகப் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம். எனவே, அங்கு வருகை தந்திருந்த ஒவ்வொரு தனிநபரின் விபரங்களையும் நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு பங்கேற்பாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதால், அவரை எனக்குத் தெரியும் என்றோ, அவருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது என்றோ, அவரை நான் தனிப்பட்ட முறையில் அழைத்தேன் என்றோ அல்லது அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் நான் ஆதரிக்கிறேன் என்றோ அர்த்தமாகாது, என்று அவர் கூறினார்.
சட்டப்படி ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த அவதூறுப் பதிவு பரப்பப்பட்டது குறித்து மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், புதிய மியான்மர் அகதிகள் குடியேறுவதை தாம் ஆதரித்ததாகவோ அல்லது அதற்கான வசதிகளைச் செய்து கொடுத்ததாகவோ கூறப்படும் குற்றச்சாட்டு, தாம் கூட்டாட்சிப் பிரதேசத் துறைக்குத் தலைமை தாங்கியபோது எடுத்த நடவடிக்கை பதிவுகளுக்கு முரணானது.
தலைநகரில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்காக, குறிப்பாக வெளிநாட்டினரின் வருகை மற்றும் மியான்மர் அகதிகளின் சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்சினைகளை ஒடுக்குவதற்காக, ஒரு ஒருங்கிணைந்த அமலாக்கப் பொறிமுறையாக ‘கேஎல் ஸ்டிரைக் ஃபோர்ஸ்’ அமைக்கப்பட்டதும் தாங்கள் மேற்கொண்ட அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
உண்மையில், கேஎல் ஸ்டிரைக் ஃபோர்ஸின் முதல் நடவடிக்கையே பண்டார் பாரு செந்தூலில் இருந்த மியான்மர் அகதிகளின் சட்டவிரோதக் குடியேற்றப் பகுதியைச் சோதனையிட்டதுதான், என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேஎல் ஸ்டிரைக் ஃபோர்ஸ் மூலமாக, சட்டவிரோதக் குடியேற்றங்கள் மற்றும் கட்டமைப்புகள், உரிமம் இல்லாத வணிகங்கள் மற்றும் முறையான அனுமதியின்றி வெளிநாட்டினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன்.
எனவே, உண்மைகளின் அடிப்படையில் அமையாத ஒரு போலியான கதையை உருவாக்குவதற்காக, தனி ஒரு புகைப்படத்தை அதன் பின்னணிச் சூழலில் இருந்து பிரித்து தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
-fmt
























