குபாங் பாசுவைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அது 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு கெடா மாநிலத்தில் பதிவான முதல் மனித ரேபிஸ் (வெறிநாய்க்கடி) பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று உயிரிழந்த அந்த நபரை கடந்த ஆகஸ்ட் மாதம் தெரு நாய் ஒன்று கடித்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபர் ஒரு சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார், ஆனால் அவருக்கு ரேபிஸ் பாதிப்புக்கு பிந்தைய தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 அன்று, பாதிக்கப்பட்டவருக்குக் சோர்வு, பலவீனம் மற்றும் அவரது வலது மேல் கையில் மரத்துப்போன உணர்வு ஆகியவை ஏற்படத் தொடங்கின. பின்னர் செப்டம்பர் 22 அன்று, இந்த அறிகுறிகள் தீவிரமடைந்து விழுங்குவதில் சிரமம், நீர் பயம், காற்று பயம், பதற்றம் மற்றும் நடத்தை மாற்றங்கள் போன்ற ரேபிஸ் நோய்க்கான மருத்துவ அறிகுறிகளாக மாறின.
அதற்கு அடுத்த நாள், பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் சிகிச்சைக்காக வந்தபோது, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டார், என்று கெடா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 24 அன்று எடுக்கப்பட்ட மருத்துவ மாதிரிகள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“இந்த உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து, கெடா மாநில சுகாதாரத்துறை, குபாங் பாசு மாவட்ட சுகாதார அலுவலகம், கெடா கால்நடை மருத்துவச் சேவைகள் துறை மற்றும் தொடர்புடைய முகமைகள் இணைந்து கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிரப் பாதிப்புகளைக் கண்டறிதல், சுகாதாரக் கல்வி, விலங்குகள் கடித்த வழக்குகள் மீதான தீவிரக் கண்காணிப்பு, இடர் மதிப்பீடு மற்றும் தெருவிலங்குகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் உள்ளடங்கும், என்று கூறப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு கெடாவில் பதிவான முதல் மனித ரேபிஸ் பாதிப்பு இது என்பதால், சுகாதார அமைச்சு, கெடா மாநில சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய முகமைகளுடன் இணைந்து, இந்தத் தொற்று எங்கிருந்து பரவியது மற்றும் அது எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய விரிவான தொற்றுநோயியல் விசாரணையை மேற்கொண்டு வருகிறது, என்றும் அது மேலும் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் எங்கெல்லாம் பயணம் செய்தார் மற்றும் அவரது முந்தைய பாதிப்பு வரலாறுகளை ஆராய்வது, அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அபாயக் காரணிகளைக் கண்டறிவது, அத்துடன் இந்தத் தொற்றுடன் தொடர்புடைய காரணிகள் மற்றும் அதன் மூலத்தைத் தீர்மானிக்க சம்பவங்களின் காலவரிசையை பகுப்பாய்வு செய்வது ஆகியவை இந்த விசாரணையில் உள்ளடங்கும்.
மனிதப் பாதிப்பு மேலாண்மை, விலங்குகள் கடித்த வழக்குகள் மீதான கண்காணிப்பு, அத்துடன் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள நாய்கள் மற்றும் பிற விலங்குகளைக் கண்காணித்து அவற்றின் இடர் மதிப்பீட்டைச் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஒன் ஹெல்த்’ அணுகுமுறையின் கீழ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டு வருவதாக கெடா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2026 ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், கெடாவில் விலங்குகள் கடித்த மற்றும் கீறிய சம்பவங்கள் மொத்தம் 502 பதிவாகியுள்ளன என்றும், அவற்றில் 65.3% நாய்களாலும், 23.1% பூனைகளாலும், 11.6% பிற விலங்குகளாலும் ஏற்பட்டுள்ளன என்றும் அது கூறியுள்ளது. மேலும், இவற்றில் 56.2% வளர்ப்பு விலங்குகளாலும், 43.8% தெருவிலங்குகளாலும் ஏற்பட்டுள்ளன என்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி, கீறல் அல்லது அவற்றின் உமிழ்நீர் மூலமாக ரேபிஸ் தொற்று பரவக்கூடும் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ள வேளையில், வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள் தங்களது நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ரேபிஸ் எதிர்ப்புத் தடுப்பூசிகளைப் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
மேலும், விலங்குகளால் கடிக்கப்பட்ட அல்லது கீறப்பட்ட எவரும் உடனடியாக அந்தப் பகுதி சோப்பு மற்றும் ஓடும் நீரைக் கொண்டு குறைந்தது 15 நிமிடங்களாவது கழுவ வேண்டும் என்றும், இடர் மதிப்பீடு மற்றும் தகுந்த சிகிச்சைக்காகப் பொது அல்லது தனியார் சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் கெடா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-fmt
























