மலேசிய அரசு, வங்கி கணக்குகளை தவறாகப் பயன்படுத்துதல் (Mule Accounts) தொடர்பான குறிப்பிட்ட குற்றங்களுக்கு கூடுதல் தண்டனையாக ‘பிரம்படி’ (Caning) வழங்குவது குறித்த முன்மொழிவை பரிசீலித்து ஆய்வு செய்து வருகிறது.
நிதி மோசடி சிண்டிகேட்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் சாம்சூல் அனுவார் நசாரா (Shamsul Anuar Nasarah) தெரிவித்தார். இந்த மோசடிகள் நாளுக்கு நாள் மிகவும் சிக்கலானதாக மாறிவருகின்றன.
அமைச்சகம் இந்த நிலைமையை உணர்ந்துள்ளது. நடைமுறையில் உள்ள தண்டனைகளின் பொருத்தம் குறித்து ஆய்வு செய்யவும், நாட்டின் குற்றவியல் சட்டக் கட்டமைப்பிற்குள் அவற்றின் செயல்திறன், ஏற்றத்தாழ்வு மற்றும் விளைவுகள் குறித்து மேலும் பகுப்பாய்வு செய்யவும் தயாராக உள்ளது.
அதிகரித்து வரும் சவாலான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (Attorney-General’s Chambers) மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், முகமைகள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து இந்த ஆய்வு விரிவாக நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில்(Dewan Rakyat) சிறப்பு அமர்வின் போது, டிரையம்ப் எஃப் எக்ஸ் (Triumph FX) முதலீட்டு மோசடி வழக்கு தொடர்பாக கூ போய் தியோங் (Khoo Poay Tiong – ஹரப்பான், கோத்தா மலாக்கா) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சாம்சூல் இதனைத் தெரிவித்தார்.
மேலும், 2023 முதல் ஆகஸ்ட் மாதம் வரை மலேசிய அரச காவல் துறை (RMP) மோசடி சிண்டிகேட் அழைப்பு மையங்களில் (call centres) 100,230 சோதனைகளை நடத்தியதாகவும், இதன் மூலம் சிண்டிகேட்டின் அனைத்து நிலைகளிலும் உள்ள 9,159 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாம்சூல் வெளிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட மொத்த நபர்களில், 36 முக்கிய குற்றவாளிகள் (masterminds), 74 மேலாளர்கள், 165 மேற்பார்வையாளர்கள், 118 நிதி மேலாளர்கள் அல்லது கணக்கு ஆபரேட்டர்கள், 132 தகவல் தொழில்நுட்ப புரோகிராமர்கள் மற்றும் 8,409 கீழ்மட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் 3,395 சோதனைகள் நடத்தப்பட்டு 3,128 கைதுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புள்ளிவிவரங்கள், மோசடி சிண்டிகேட்களின் முழு செயல்பாட்டு சங்கிலியையும் முடக்குவதற்கு காவல் துறை தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதைக் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
கீழ்மட்ட குற்றவாளிகள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், இத்தகைய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும், நிர்வகிக்கும் மற்றும் அதிலிருந்து லாபம் அடையும் நபர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்று சாம்சூல் கூறினார்.
























