இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைப்பான இந்தோனேசிய சுற்றுச்சூழல் மன்றம் (Walhi), எல்லை தாண்டிப் பரவிய புகைமூட்ட நெருக்கடிக்குக் காரணமான காட்டுத் தீ மற்றும் நிலத் தீ சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் 21 மலேசியத் தொடர்புடைய நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை, அக்டோபர் 16 அன்று புத்ராஜெயா வெளியிட்ட அறிக்கைக்கு முரணாக உள்ளது. தோட்டங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சகம் நடத்திய ஆய்வில், மலேசியத் தோட்ட நிறுவனங்கள் எதுவும் இந்தத் தீச் சம்பவங்களில் ஈடுபடவில்லை எனக் கண்டறியப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
Walhi வெளியிட்ட “தீ விபத்துகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? — தொடர்புடைய தரப்பினரின் வரைபடப் பகுப்பாய்வு” (Actor Mapping Analysis: Who Are Behind The Fires?) என்ற அறிக்கையை மேற்கோள் காட்டிய அந்த அமைப்பின் வனங்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் பிரச்சாரப் பொறுப்பாளர் உமி மஃரூஃபா (Umi Ma’rufah), காகிதத்தில் உள்ள கொள்கைகள் அல்லது நிறுவனங்களின் சொந்த அறிவிப்புகளை மட்டும் நம்பாமல், மலேசிய அரசாங்கம் நேரடியாகக் கள நிலவரத்தை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்று மலேசிய சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் நடைபெற்ற இணையவழி வட்டமேசைக் கலந்துரையாடலில் பேசிய அவர், பல மலேசியத் தாய் நிறுவனங்களுடன் தொடர்புடைய சலுகைப் பகுதிகளில் (concession areas) தீப்பரவல் வெப்பப் புள்ளிகளும் (hotspots), தீச்சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதை Walhi-யின் ஆய்வு கண்டறிந்துள்ளதாகக் கூறினார்.
சில நிறுவனங்கள் பெயரிடப்பட்டிருந்தாலும், அவற்றிடமிருந்து அதிகாரப்பூர்வ பதில்கள் கிடைக்கும் வரை அவற்றின் பெயர்களில் சிலவற்றை மலேசியக்கினி செய்தித் தளம் வெளியிடவில்லை.
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு தகவல் தொடர்பு அமைச்சகத்தையும் தோட்டங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சகத்தையும் மலேசியக்கினி தொடர்புகொண்டுள்ளது.
பின்னர், தகவல் தொடர்பு அமைச்சகம் இந்தச் செய்தித் தளத்தை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகத்திடம் அனுப்பியது. அந்த அமைச்சகத்திடமும் மலேசியக்கினி கருத்துக் கேட்டுள்ளது; பதிலுக்காகக் காத்திருக்கிறது.
‘தீ எங்கிருந்து தொடங்கியது என்பது முக்கியமல்ல’
குற்றச்சாட்டுகளில் பெயரிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான SD Guthrie, தனது துணை நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தீச்சம்பவங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. அதற்கு மாறான கூற்றுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 20 அன்று வெளியிட்ட அறிக்கையில், பொதுவெளி அறிக்கைகளில் Guthrie நிறுவனத்துடன் தொடர்புடையவை எனக் குறிப்பிடப்பட்ட சில நிறுவனங்கள், உண்மையில் அதன் உடைமையிலோ, நிர்வாகத்திலோ அல்லது கட்டுப்பாட்டிலோ இல்லை என்று அது கூறியது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தனது குழுக்கள் மொத்தம் 2,411 தீச்சம்பவங்களை அணைத்ததாகவும், அவற்றில் 2,376 சம்பவங்கள் சமூகங்களுக்குச் சொந்தமான நிலங்களில் நிகழ்ந்ததாகவும் நிறுவனம் தெரிவித்தது.
மேலும், இந்தோனேசியாவில் உள்ள தனது துணை நிறுவனமான Minamas Plantation, தீயணைப்புப் பணிகளுக்காக மாதந்தோறும் சுமார் ரிம 800,000 செலவிடுவதாகவும் கூறியது. இந்தப் பணிகளுக்காக 1,006 பணியாளர்களைக் கொண்ட 67 தீயணைப்புக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றுக்கு ட்ரோன்கள் மற்றும் அகச்சிவப்புக் கண்காணிப்பு தொழில்நுட்பங்களும் உதவுகின்றன.
இதற்கு முன்னதாக, மலேசிய நிறுவனமான Genting Plantations மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசாங்கப் பேச்சாளர் பஹ்மி பட்சில் (Fahmi Fadzil) நிராகரித்திருந்தார். அந்த நிறுவனத்தின் நிலப்பகுதிக்கு வெளியே தொடங்கிய தீ அதன் சொத்துப் பகுதிக்குள் பரவிய பின்னர் அணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்தோனேசியச் சட்டங்களின்படி, தீயை முதலில் யார் அல்லது எது தொடங்கியது என்பதைப் பொருட்படுத்தாமல், தங்கள் சலுகைப் பகுதிகளில் தீ ஏற்படுவதைத் தடுக்கும் பொறுப்பு அந்த நிலங்களின் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு இருப்பதாக உமி வலியுறுத்தினார்.
“இந்தத் தீச்சம்பவங்கள் அங்கு நிகழ்ந்துவிட்டால், அவற்றைத் தடுப்பதில் காட்டியதாகக் கூறப்படும் அலட்சியத்திற்காக அந்த நிறுவனங்கள் நிச்சயமாகப் பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அக்டோபர் 5 அன்று, Greenpeace Indonesia மற்றும் Pantau Gambut ஆகிய அமைப்புகள் வெளியிட்ட தகவலின்படி, காட்டுத் தீயில் தொடர்புடையதாகக் கூறப்படும் 20 நிறுவனங்களில் மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தோட்ட நிறுவனங்களும் அடங்குகின்றன.
அந்த அறிக்கையில், மலேசியத் தோட்ட நிறுவனமான Kuala Lumpur Kepong (KLK) குழுமமும் குறிப்பிடப்பட்டது. இந்தக் குழுமத்துக்கு இந்தோனேசிய நிறுவனமான PT Menteng Jaya Sawit Perdana உடன் தொடர்பு உள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 1, 2026 வரையிலான புகைமூட்டத்தின் மூலங்களைக் கண்காணிக்கும் தரவுத்தொகுப்பின் அடிப்படையில், தீச்சம்பவங்களுடன் மிக நெருங்கிய தொடர்புடைய 20 நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது.
அதே இந்தோனேசிய நிறுவனம், 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையிலும் தனது நிலப்பகுதியில் தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த KLK, தனது இந்தோனேசியத் துணை நிறுவனத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட தீச்சம்பவங்கள் உண்மையில் அதன் சலுகைப் பகுதிக்கு வெளியே தொடங்கியவை என்றும், அவை அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டன என்றும் தெரிவித்தது. தீயைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் அதிகரித்துள்ளதாகக் கூறியது.
நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கை
தொடர்ந்து பேசிய உமி, குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் எதிராக இந்தோனேசியாவின் 1999ஆம் ஆண்டின் வனச் சட்டத்தின் 71வது பிரிவின்கீழ் வழக்குத் தொடர Walhi திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தப் பிரிவு, மாசுபாடு மற்றும் வன அழிவால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்போது, அவர்கள் பொதுநல வழக்குத் தொடர அனுமதிக்கிறது.
“பொதுமக்களுக்கு சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் பெறும் உரிமையை உறுதிப்படுத்துவது, தீச்சம்பவங்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது, மேலும் காட்டுத் தீ மற்றும் நிலத் தீச்சம்பவங்களில் தொடர்புடைய தரப்புகள், நிறுவனங்கள் உட்பட, சட்டரீதியாகப் பொறுப்பேற்பதை உறுதிசெய்வது ஆகியவையே Walhi-யின் கோரிக்கைகளாகும்,” என்று அவர் Malaysiakini-யிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம், மேற்கு கலிமந்தானில் உள்ள பழங்குடியின மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டணி, காட்டுத் தீயைத் தடுப்பதிலும் மீண்டும் மீண்டும் ஏற்படும் தீச்சம்பவங்களுக்குப் பதிலளிப்பதிலும் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (Prabowo Subianto) மற்றும் 26 அதிகாரிகளுக்கு எதிராகக் கூட்டுவழக்குத் தொடர்ந்தது.
வலுவான தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இலவச சுகாதாரப் பராமரிப்பு, மேலும் தீச்சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுதாரர்கள் முன்வைத்துள்ளனர்.
இருப்பினும், இந்தோனேசியாவுக்குள் தொடரப்படும் வழக்குகள் அந்நாட்டில் உள்ள உள்ளூர் துணை நிறுவனங்கள் மற்றும் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களை மட்டுமே சென்றடைகின்றன என்று உமி கூறினார்.
எனவே, சிங்கப்பூரில் வழக்குத் தொடருவதற்கான சட்டரீதியான கருத்தாய்வைத் தயாரிக்க Walhi ஓர் சர்வதேச சட்ட ஆலோசகரின் சேவையைப் பெற்றுள்ளது.
இதேபோன்ற சட்ட நடவடிக்கை மலேசியாவிலும் மேற்கொள்ளப்படுமா என்று கேட்டபோது, Walhi-யின் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் உலி ஆர்த்தா சியாகியான் (Uli Arta Siagian) கூறியதாவது:
எங்களுடைய ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, சட்டக் கண்ணோட்டத்தில் சிங்கப்பூரில் வழக்குத் தொடர்வது இன்னும் எளிதாக உள்ளது.
“மலேசியப் பொதுமக்களும் இதேபோன்ற வழக்கை மலேசியாவில் தொடர முடியும். அந்த வழி இன்னும் எளிதானது.”
சிங்கப்பூரின் 2014ஆம் ஆண்டின் எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுபாட்டுச் சட்டம் (Transboundary Haze Pollution Act 2014), கட்டுப்பாட்டை வைத்திருக்கும் தாய் நிறுவனங்கள் மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு “வாய்ப்பை” வழங்குவதாக உமி குறிப்பிட்டார்.
ஆனால், தற்போது மலேசியாவில் இதேபோன்ற சட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வலுவான நடவடிக்கைக்கான அழுத்தம்
அக்டோபர் 13 அன்று, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் சையத் இப்ராஹிம் சையத் நோ (Syed Ibrahim Syed Noh), எல்லை தாண்டிய புகைமூட்டத்தைத் தடுப்பதற்கான தனிச் சட்டத்தை இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதாக மக்களவையில் தெரிவித்தார்.
எனினும், புகைமூட்டம் எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணப் போதுமான ஆதாரங்களைச் சேகரிப்பதே மிகப்பெரிய தடையாக இருப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள தாய் நிறுவனங்களை விசாரிக்குமாறு அந்தந்த அரசாங்கங்களைக் கோரும் நோக்கில், புகைமூட்டம் மற்றும் அதில் தொடர்புடைய தரப்புகள் குறித்த தனது அறிக்கைகளை இந்தோனேசியாவில் உள்ள மலேசிய மற்றும் சிங்கப்பூர் தூதரகங்களிடம் சமர்ப்பிக்க Walhi தயாராகி வருகிறது என்று உமி கூறினார்.
மேலும், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தவும் விதிமுறைகளை மீறுவோருக்குப் பொறுப்பேற்பை உறுதிசெய்யவும், ஆசியான் எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுபாடு ஒப்பந்தத்தில் போதுமான “அழுத்தமோ அதிகாரமோ” இல்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாண்டியாகோ
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாண்டியாகோவும் (Charles Santiago), இந்தப் பிராந்திய அமைப்பின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
மீண்டும் மீண்டும் ஏற்படும் புகைமூட்டப் பிரச்சினையில் ஆசியான் அமைப்பு, “நடவடிக்கை ஏதுமில்லை; பேச்சு மட்டுமே” என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
“மலேசியாவும் அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது — உண்மையை முற்றிலும் மறுக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் 22 வெளிநாட்டுச் சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
அக்டோபர் 19 அன்று, Politik Indonesia என்ற செய்தித் தளம் வெளியிட்ட செய்தியின்படி, இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சகம் காட்டுத் தீ மற்றும் நிலத் தீச்சம்பவங்கள் தொடர்பாக வெளிநாட்டுச் சொந்தமான 22 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. அவற்றில் ஒன்பது நிறுவனங்கள் மலேசியாவைச் சேர்ந்தவை.
ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை, இந்தோனேசியாவின் பல மாகாணங்களில் மொத்தம் 6,033.85 ஹெக்டேர் எரிந்த நிலப்பகுதிகள் அதிகாரிகளால் மூடப்பட்டதாக அந்தச் செய்தி தெரிவித்தது. இது சுமார் 5,587 கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்குச் சமமாகும்.
“இந்த மொத்த எரிந்த நிலப்பரப்பில் 95 சதவீதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான சொத்துகளாகும். தீச்சம்பவங்களில் 79 சதவீதம் கலிமந்தான் தீவில் குவிந்திருந்தன,” என்றும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.
























