தீவாளியா தீபாவளியா?

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் உள்ள அரசு சாரா இயக்கங்கள், குறிப்பாக நம் இனத்தைச் சார்ந்த அமைப்புகள், சமூகக் கடப்பாடுகளை நிறையவே கொண்டுள்ளன. தடம் மாறி அரசியல் கட்சிகளைப் போல செயல்படுவதை அவ்வியக்கங்கள் தவிர்க்க வேண்டும்.

இன்னும் சில தினங்களில் இந்துக்கள் கொண்டாடவிருக்கும் பண்டிகை தீவாளியா தீபாவளியா எனும் சர்ச்சை அரசியலாக்கப்பட்டுள்ள நிலையில் பல அரசு சாரா இயக்கங்களும் அந்த விவாதங்களில் புகுந்துள்ளது நமக்கு வியப்பாக உள்ளது.

தீவாளியா, தீபாவளியா, எனும் சர்ச்சை நேற்றோ இன்றோ முளைத்த விவாதமல்ல. இது, காலங்காலமாக இருந்து வரும் ஒரு விஷயம்தான். தற்போது தீடீரென ‘பழைய சாம்பாரை சுடவைத்துக் கொடுப்பதைப் போல்’ உள்ளது அரசியல்வாதிகளின் போக்கு.

தீபாவளி வாழ்த்து அட்டைகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்த சமயங்களில் கூட ‘தீவாளி’ எனும் சொல் அதிக அளவு பயன்படுத்தப்பட்டது. அது இந்தியாவின் வடநாட்டுச் சொல் என்று தெரிந்தும் நிறைய பேர் அதனை பொருட்படுத்தாமல் கடந்து சென்றனர்.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் ‘மலேசியா இன்று’வில் பிரசுரமான ஒரு கட்டுரையில் கூட இதன் தொடர்பான விளக்கங்களும் விவரங்களும் மிகத் தெளிவாக, விரிவாக எழுதப்பட்டிருந்தன.

ஆனால் தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் எழுப்பியுள்ள வாழ்த்து பதாகைகளில் ‘தீவாளி’ என தவறாக உள்ளது என்று ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன் புகார் கூறியதைத் தொடர்ந்துதான் பலருடைய கண்கள் அகல விரிந்தன.

சரவணனின் ஆதங்கத்தை ஏற்றுக் கொண்ட கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ தவறை ஒப்புக் கொண்டுள்ள போதிலும் பல்வேறு தரப்பினர் குறுக்கே புகுந்து அவ்விவகாரத்தை அரசியலாக்கி, பூதாகரமாக்கி, வீண் விதண்டாவாதம் செய்து அனாவசிய விளம்பரம் தேட முற்பட்டுள்ளனர்.

பல அரசு சாரா இயக்கங்கள், சரவணனின் நிழலில் மறைந்து கொண்டு ஹன்னா யோவையும் கூட்டரசுப் பிரதேச அமைச்சையும் சாடுவது நமக்கு சற்று வேடிக்கையாக உள்ளது. இந்தச் துணிச்சல் இவ்வளவு நாள்களாக ஏன் இவர்களுக்கு வரவில்லை என்று நமக்கு வியப்பாகவும் இருக்கிறது.

இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதைப் போல பத்திரிகைகளிலும் புலனங்களிலும் சரமாரியாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். இவ்விவகாரம் தொட்டு சரவணன் பேசவில்லையென்றால் இவர்களும் வெறுமனே கடந்து சென்றிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இதற்கிடையே கடந்த காலங்களில் ம.இ.கா.வும் அதன் பதாகையொன்றில் ‘தீவாளி’ என்றுதானே குறிப்பிட்டுள்ளது என ஜ.செ.க.வின் இளைஞரணியான ‘டெப்சி'(Dapsy) எதிர்வாதம் செய்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் ம.இ.கா. வெளியிட்ட தீபாவளி திறந்த இல்ல விருந்துக்கான அழைப்பு பதாகையில் HAPPY DIWALI(தீவாளி வாழ்த்து) என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அவர்கள் கட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் அந்தப் பதாகையை அதிக அளவில் பகிர்ந்தனர்.

ஆக, காலங்காலமாக தங்களுடைய கண்களில் படாத, நம் மொழி சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை அரசியல்வாதிகள்தான் வீண் அரசியலாக்கி குளிர்காய்கின்றனர் என்றால் அரசு சாரா இயக்கங்களைச் சார்ந்தவர்களும் உள்ளே புகுந்து ‘ஜால்ரா’ போடக்கூடாது.

மொழி, இனம், கலை, கலாச்சாரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் அரசியல் கலக்காத கடப்பாடு தங்களுக்கும் உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. அரசியல்வாதிகளின் நிழலில் ஒலிந்து கொண்டு ‘கூட்டத்தோடு கோவிந்தா’ போடும் கலாச்சாரத்தை அவர்கள் விட்டொழிக்க வேண்டும்.

முடிவாக:

“தீபாவளி” என்பது எழுத்து வழக்கில் நிலைபெற்ற வடிவம்; “தீவாளி” என்பது பேச்சு வழக்கில் காணப்படக்கூடிய வடிவம். ஒன்றை மொழியியல் அடிப்படையில் விளக்குவதற்குப் பதிலாக, மற்றொன்றைப் பயன்படுத்துபவர்களைத் தவறானவர்கள் என்று முத்திரை குத்துவது மொழி ஆய்வல்ல.