மலேசியாவில் ஊதியத்தை உயர்த்தலாம், ஆயிரக்கணக்கான திறமையான பட்டதாரிகளை உருவாக்கலாம். ஆனால், மலேசியர்களை விட குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதையே முதலாளிகள் தொடர்ந்து விரும்பும் வரை, பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது.
இதுதான் தற்போது மலேசியா எதிர்கொண்டுள்ள கசப்பான உண்மை. பல தசாப்தங்களாக வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் போக்கு, மலேசியத் தொழிலாளர்களின் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய ஊதியத்தை வழங்குவதில் பல நிறுவனங்களைத் தயக்கம் காட்டச் செய்துள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி எச்சரித்துள்ளார்.
குறைந்தபட்ச ஊதியம் ரிம 1,700 ஆக உயர்த்தப்பட்ட போதிலும், முதலாளிகளின் மனப்போக்கில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. சில நிறுவனங்கள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) பட்டதாரிகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையான சம்பளத்தையே இன்னும் வழங்குகின்றன.
“நாம் வழங்கும் ஊதியம் உள்ளூர் தொழிலாளர்களுக்குப் போதுமான பொருளாதாரப் பயனை அளிப்பதில்லை. அதனால்தான் அவர்கள் அந்த வேலைகளை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை,” என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.
மலேசிய தேசிய முன்னணி (BN-Titiwangsa) நாடாளுமன்ற உறுப்பினருமான ஜொஹாரி, உள்ளூர் தொழிலாளர்களை வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடங்களில் தங்கவைக்கும் முதலாளிகள் குறித்தும் சுட்டிக்காட்டினார். அதேவேளை, அந்த வளாகங்களுக்கு வெளியே தங்கும் உள்ளூர் தொழிலாளர்களிடம் வாடகையும் வசூலிக்கப்படுவதாக அவர் கூறினார்.
குறைந்த ஊதியத்தை வழங்கிக்கொண்டு பெரும் லாபம் ஈட்டிப் பழகிவிட்ட நிறுவனங்கள் குறித்து அமைச்சர் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் லாபம் ஈட்டுகின்றன. ஆனால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரிம 2,000 ஊதியம் வழங்குவதற்குக்கூட தயங்குகின்றன. இன்னமும் ரிம 1,700 சம்பளத்தையே வழங்குகின்றன.
“அதனால்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எளிதான காரியமாக இருக்காது என்று கூறுகிறேன். இந்தக் கொள்கைகளை நாம் சரிசெய்யத் தவறினால், நாட்டில் ஆவணமற்ற தொழிலாளர்கள் உட்பட, தற்போது பணியாற்றும் 2.6 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் மலேசியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்,” என்றும் அவர் கூறினார்.
தொழில்துறைகள் தானியக்க முறையைப் பின்பற்ற வேண்டும், உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும், மலேசியர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் போக்கு நாட்டில் வேரூன்றிவருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் விதிமுறைகளைத் தளர்த்த எதிர்ப்பு
தொழில்துறைகளின் தானியக்க நிலை மற்றும் உண்மையான தொழிலாளர் தேவைகளைக் கருத்தில்கொண்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான துறைசார்ந்த கொள்கைகளை அறிமுகப்படுத்த அமைச்சு தயாராக உள்ளதா என்று ஹராப்பான்-பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஹொங் பின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஜொஹாரி இவ்வாறு தெரிவித்தார்.
சில தொழில்துறைகள் ஏற்கெனவே தானியக்க முறையை அதிகபட்சமாகப் பயன்படுத்தியுள்ள போதிலும், கையால் செய்யப்படும் வேலைகளுக்கு இன்னமும் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக டான் குறிப்பிட்டார். எனவே, தங்களது செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அதிக நெகிழ்வுத்தன்மை வழங்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டான் ஹொங் பின் (ஹராப்பான்-பக்ரி)
எனினும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவது, அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர் சார்பு நிலையை மேலும் நீடிக்கச் செய்யும் என்று ஜொஹாரி எச்சரித்தார்.
அரசாங்கத்தின் இலக்கின்படி, நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 80 விழுக்காட்டினர் உள்ளூர் தொழிலாளர்களாகவும், 20 விழுக்காட்டினர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், சில தொழில்துறைகளில் இந்த விகிதம் தலைகீழாக உள்ளது. அதாவது, 80 விழுக்காட்டினர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாகவும், மீதமுள்ள 20 விழுக்காட்டினர் மலேசியர்களாகவும் உள்ளனர்.
இதேபோன்ற தொழிலைத் தொடங்குவதற்குப் புதிய உரிமம் கோரி யார் வந்தாலும், நாங்கள் ‘முடியாது’ என்றுதான் கூறுகிறோம். வெளிநாட்டுத் தொழிலாளர்களை அவர்கள் விரும்பினால், அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
“அப்படியானால், இதற்கு முன்பு நாம் போதிய கவனம் செலுத்தத் தவறிய TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறோம்?” என்று ஜொஹாரி கேள்வி எழுப்பினார்.
3D எனப்படும் ஆபத்தான, கடினமான, அழுக்கான வேலைகளுக்கு மட்டுமே
ஆவணமற்ற தொழிலாளர்களைத் தவிர்த்து, மலேசியாவில் தற்போது சுமார் 2.6 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 13ஆவது மலேசியத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்த எண்ணிக்கை எடுத்துக்காட்டுவதாக ஜொஹாரி தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக மலேசியாவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதற்குப் பழகிவிட்டதால், இந்த நிலையை மாற்றுவது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆபத்தான (Dangerous), கடினமான (Difficult), அழுக்கான (Dirty) வேலைகள் என வகைப்படுத்தப்படும் 3D வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் மற்ற வேலைவாய்ப்புகளை உள்ளூர் திறமையாளர்கள் அதிகளவில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் கிட்டத்தட்ட 4 லட்சம் TVET பட்டதாரிகள் உள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த விரும்பும் தொழில்துறையினருக்கு, அவர்கள் 3D வேலைகளுக்கு மட்டுமே வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்றும் ஜொஹாரி கூறினார்.
“எந்தவொரு தொழில்துறையினரும் அமைச்சையோ அல்லது முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தையோ அணுகும்போது, வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தலாம், ஆனால் அவர்கள் 3D வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் விளக்குவோம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
























