மற்றைய சம்பவங்களில், சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களை அணுகிய அறிமுகமில்லாத நபர்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக கிளந்தான் சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகால புள்ளிவிவரங்களின்படி, 217 சம்பவங்களுடன் உடல் ரீதியான துன்புறுத்தலே அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 181 சம்பவங்களும், உணர்வு ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக 10 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கிளந்தானில் இவ்வாண்டு சிறுவர் துன்புறுத்தல் மற்றும் புறக்கணிப்பு தொடர்பான 664 சம்பவங்களுக்குப் பெற்றோர், மாற்றாந்தாய், மாற்றாந்தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களே காரணமாக இருந்ததாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் சகோதரர்கள், மாற்றுச் சகோதரர்கள், அவர்களின் தாய்மார்களின் காதலர்கள், மாமாக்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அறிமுகமானவர்களும் இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கிளந்தான் சமூக நலத்துறை இயக்குநர் சே சாம்சுசுகி சே நோஹ் தெரிவித்தார்.
மேலும், TikTok, முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகச் சிறுவர்களை அணுகிய முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
“குடும்பப் பிரச்சினைகள், நிதி நெருக்கடி, விவாகரத்து மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் உள்ளிட்டவை சிறுவர் துன்புறுத்தல் மற்றும் புறக்கணிப்புக்குக் காரணமான அம்சங்களில் அடங்கும்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உள்ளடக்கிய கடந்த இரண்டு ஆண்டுகால புள்ளிவிவரங்களின்படி, உடல் ரீதியான துன்புறுத்தலே அதிகமாகப் பதிவாகியுள்ளது. இவ்வகையில் 217 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக, பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் 181 சம்பவங்களும், உணர்வு ரீதியான துன்புறுத்தல் தொடர்பில் 10 சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்று சே சாம்சுசுகி தெரிவித்தார்.
இவ்வாண்டு அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் கோத்தா பாருவில் 257 ஆகப் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பாசிர் மாஸ் பகுதியில் 62 சம்பவங்களும், குவா மூசாங் பகுதியில் 59 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு கிளந்தானில் மொத்தம் 667 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் அதிகபட்சமாக கோத்தா பாருவில் 221 சம்பவங்களும், தும்பாட்டில் 77 சம்பவங்களும், குவா மூசாங்கில் 62 சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பாகத் தமது துறை விசாரணைகளைத் தொடங்குவதுடன், புகார் அளிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு நிலைமையையும் மதிப்பீடு செய்யும் என்று சே சாம்சசுகி தெரிவித்தார்.
இதற்காகக் காவல்துறை மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்படும் சிறுவர்கள் மீட்கப்பட்டு, பொருத்தமான பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்படுவர். மேலும், அவர்கள் மீண்டு வருவதற்கு உதவும் வகையில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உளவியல், சமூக ஆதரவு சேவைகளும் வழங்கப்படும்.
























