சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத் தடுப்பு, நீர் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான ரிம 3.3 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தை மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தாக்கல் செய்துள்ளார்.
இன்று மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைவிட ரிம 70 மில்லியன் அதிகமாகும். இதில் ரிம 1.9 பில்லியன் நிர்வாகச் செலவினங்களுக்கும், ரிம 1.4 பில்லியன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசுக்குச் சொந்தமான Media Selangor செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
“முற்போக்கான சிலாங்கூர் மாநிலம், நிறுவனங்களுக்கு மதிப்பளித்தல், மக்களுக்கு மரியாதை அளித்தல்” என்ற கருப்பொருளில் இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகப் பல மாவட்டங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளப் பிரச்சினை மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு செயல்படுத்துவதற்காக வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார். தொழில்நுட்ப ஆய்வுகள், நிலம் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, திட்டங்களுக்கான ஒப்புதல்களை விரைவுபடுத்தப் போவதாகவும் அவர் கூறினார்.
“அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் சிலாங்கூர் மாநிலத்தை வெள்ளப் பாதிப்பில்லாத மாநிலமாக மாற்றுவதை உறுதிசெய்ய, இந்த முயற்சிக்கு நானே தனிப்பட்ட முறையில் தலைமை தாங்குவேன். திட்டங்களின் முன்னேற்றத்தை மாதந்தோறும், வாரந்தோறும் ஆய்வு செய்வேன்,” என்று அவர் தெரிவித்தார்.
எனினும், திட்டங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரநிலைகள், சுற்றுச்சூழல் தேவைகள் அல்லது கொள்முதல் நடைமுறைகள் ஆகியவற்றில் எந்தவிதமான சமரசத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 47 வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ரிம 36.45 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 30 ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டங்களாகும். மேலும் 17 புதிய திட்டங்களாகும்.
ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டங்களில் 13 முடிவடைந்துள்ளன. ஒன்பது திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எஞ்சிய எட்டு திட்டங்கள் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு முந்தைய கட்டத்திலும் அல்லது வடிவமைப்புக் கட்டத்திலும் உள்ளன.
புதிய திட்டங்களின் பணிகளும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன. அவற்றில் 11 திட்டங்களுக்கு ஆலோசகர்களை நியமிக்க வேண்டியுள்ளது. ஐந்து திட்டங்கள் இன்னும் திட்டமிடும் நிலையில் உள்ளன. ஒரேயொரு திட்டம் மட்டுமே வடிவமைப்புக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் கிள்ளான் ஆற்றுப் படுகைத் திட்டங்களுக்கு ரிம 9.15 மில்லியனும், லங்காட் ஆற்றுப் படுகைத் திட்டங்களுக்கு ரிம 7.35 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள நிதி சுங்கை பூலோ, சுங்கை சிலாங்கூர், சுங்கை பெர்னாம் மற்றும் காப்பார் பெசார் உள்ளிட்ட பகுதிகளுக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
நீர் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து
சுத்தமான நீர் விநியோகத்தை வலுப்படுத்துவதற்காக மாநில அரசு ரிம 101 மில்லியன் ஒதுக்கியுள்ளது. மூல நீர் மாசுபடும் சம்பவங்களின்போதும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
இதில் மூல நீர் உத்தரவாதத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதுடன், ஆற்றுக்கு வெளியே நீரைச் சேமிக்கும் வசதிகளை உருவாக்க ரிம 1 மில்லியனும், மூல நீரின் மாதிரிகளைத் தானியங்கி முறையில் சேகரிப்பதற்கு ரிம 150,000 ஒதுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மாற்று நீர் சேமிப்பு வசதிகள், ஆறுகளில் தொலைநிலை கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் நீரின் தரத்தில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதிகாரிகள் விரைவாகவும் திறம்படவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமிருடின் தெரிவித்தார்.
சிலாங்கூர், ஷா ஆலம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம்
பொதுப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்த மேலும் ரிம 24 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போதுள்ள போக்குவரத்து வலையமைப்புகளுடன் இணைக்கும் தொடக்க மற்றும் இறுதிக் கட்டப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், பொதுப் போக்குவரத்து தொடர்பான தகவல்களை ஒரே அமைப்பின் மூலம் மக்கள் எளிதாகப் பெறுவதற்காக, ‘Selangor Mobility Nexus’ எனும் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தரவு மற்றும் தகவல் மையத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
பொதுப் போக்குவரத்து முதன்மையாக மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும், கிட்டத்தட்ட 75 லட்சம் மக்கள் வசிக்கும் சிலாங்கூரில், மத்திய அரசின் முயற்சிகளுக்கு மாநில அரசும் துணை நிற்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று அமிருடின் கூறினார்.
ரயில் நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் மூடப்பட்ட நடைபாதைகளை அமைத்து, பாதசாரிகளுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவதும் திட்டங்களில் அடங்கும். இதனுடன் நீண்டகாலத் திட்டமாக சிலாங்கூர் ரயில் பாதையை அமைப்பது குறித்த முன்மொழிவும் இடம்பெற்றுள்ளது.
பொருளாதாரம் ரிம 500 பில்லியனைத் தாண்டும் எனக் கணிப்பு
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, 2027ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரிம 500 பில்லியனைத் தாண்டும் முதல் மலேசிய மாநிலமாக சிலாங்கூர் திகழும் என்று அமிருடின் கணித்துள்ளார்.
*Media Selangor* செய்தியின்படி, சிலாங்கூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024ஆம் ஆண்டில் ரிம 432.1 பில்லியனாக இருந்தது. இது 2025ஆம் ஆண்டில் ரிம 460.1 பில்லியனாக அதிகரித்தது. இதன் மூலம் நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் சிலாங்கூரின் பங்களிப்பு 26.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரிம 489 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் மூலம் குறைந்த கரிம உமிழ்வைக் கொண்ட பொருளாதாரத்தை விரிவுபடுத்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன், சிறிய அளவிலான நீர்மின் உற்பத்தி மற்றும் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
2027ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பத்தாங் காலி பசுமை ஹைட்ரஜன் மையமும், மொத்தம் 11.6 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படும் மூன்று சிறிய நீர்மின் நிலையங்களும் குறிப்பிடத்தக்க திட்டங்களாகும்.
2026ஆம் ஆண்டுக்கான ரிம 2.8 பில்லியன் வருவாய் இலக்கைத் தாண்டி, நவம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி மாநில அரசு ரிம 2.82 பில்லியன் வருவாயை வசூலித்துள்ளது.
இந்த வருவாய் அதிகரிப்பு, அடுத்த ஆண்டுக்கான செலவினத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
























