தென் சீனக் கடல் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில், அண்டை நாடுகளுடனான தனது அணுகுமுறையில் மலேசியா தொடர்ந்து ராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் அண்டை நாடுகளுடனான ராஜதந்திரமும் சுமுகமான உறவுகளும் மிகவும் முக்கியமானவை என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதனால்தான் நாங்கள் நல்லுறவைப் பேணி வருகிறோம்; நல்வாய்ப்பாக, அண்டை நாடுகளுடனான எங்களது உறவுகள் மிகச் சிறப்பாக உள்ளன, என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 2026-2030 தேசியப் பாதுகாப்புக் கொள்கையின் அறிமுக விழாவில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், தற்காப்பு அமைச்சர் காலித் நோர்டின் மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் ராஜா நுஷிர்வான் ஜைனல் அபிடின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அண்டை நாடுகளுடனான கடல் எல்லை தொடர்பான விவகாரங்கள், நாடுகளுக்கு இடையிலான சுமுகமான உறவைப் பாதிக்கவோ அல்லது பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என்று அன்வார் தெரிவித்தார்.
தென் சீனக் கடலில் நடத்தை விதிகளை இறுதி செய்வதற்காக, மற்ற ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து மலேசியா சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
இதில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நடத்தை விதிகளை இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த சீனப் பிரதமர் லீ கியாங் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனப் பிரதமரின் பதில் மிகத் தெளிவாக ‘ஆம்’ என்பதாக இருந்தது, என்று அவர் கூறினார்.
கடல்களைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் சர்வதேச சட்டக் கட்டமைப்பை வழங்கும் 1982-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் கடல் சட்ட சாசனத்திற்கு (UNCLOS) உட்பட்டதாக இந்த நடத்தை விதிகள் அமையும் என்று அன்வார் தெரிவித்தார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பது தென் சீனக் கடல் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன என்பதைக் குறிக்காது என்று வலியுறுத்திய அவர், மலேசியாவின் தற்காப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அரச மலேசியக் கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக அப்பகுதியில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தற்காப்பு அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக நமது திறன்களை வலுப்படுத்தவும், செயல்பாட்டுத் தயார்நிலையைப் பராமரிக்கவும் தற்காப்பு அமைச்சரும் அமைச்சகமும் விடுத்துள்ள அழைப்பை நான் ஏற்றுக்கொண்டாலும், நான் ராஜதந்திரப் பாதையையே தேர்ந்தெடுக்கிறேன், என்று அவர் தெரிவித்தார்.
-fmt
























