தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து மக்களுடைய கவனமும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு மீது பதிந்துள்ள வேளையில் 2007ம் ஆண்டு சுஹாக்காம் என்னும் மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்த சீர்திருத்தங்கள் குறித்து வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தியுள்ளது.
தேர்வுக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளது பற்றிக் கருத்துரைத்த அந்த மன்றத் தலைவர் லிம் சீ வி சுஹாக்காம் பரிந்துரைகளை நினைவுபடுத்தினார்.
தேர்தல் சீர்திருத்தங்களைப் பரிசீலிப்பதற்கு தேர்வுக் குழு, பரிந்துரைகள் செய்யும் வரையில் அரசாங்கம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
“2007ம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தங்கள் மீது சுஹாக்காம் தனது பரிந்துரைகளை வெளியிட்டது. ஊடகங்களில் சமமான வாய்ப்புக்கள், நீண்ட பிரச்சார காலம், தகுதி பெற்ற வாக்காளர்களின் இயல்பான பதிவு ஆகியவை அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.”
“அந்தப் பரிந்துரைகள் மிகத் தெளிவாக உள்ளன. நல்ல சிந்தனை கொண்ட எந்த மலேசியரும் அவற்றுக்கு எதிராக வாதாட மாட்டார்கள். 2007ல் அல்லது 2008ல் அவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைச் செய்திருந்தால் தேர்தல் சீர்திருத்தங்களை ஏற்கனவே அமலாக்கியிருக்கலாம்,” என்று லிம் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
“சுஹாக்காமையும் அதன் பணிகளையும் அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதன் அறிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.”
நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவதையும் ஊடகத் தணிக்கை முறைகளை மறு ஆய்வு செய்வதையும் வழக்குரைஞர் மன்றம் வரவேற்பதாகவும் லிம் குறிப்பிட்டார். என்றாலும் அந்த அறிவிப்புக்கள் விரைவில் அமலாக்கப்பட்டு உண்மையான மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் நம்புகிறார்.