அன்வார் ஆட்சிக்கு சோதனை

இராகவன் கருப்பையா – கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து அநேகமாக அன்வார் செய்த மிகப் பெரிய தவறு முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியை ஓரங்கட்டியதுதான்.

ரஃபிஸி தலைமையிலான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ரஃபிஸி  ஆற்றல்மிக்க ஒரு அரசியல்வாதி என்பது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். எந்த விஷயமாக இருந்தாலும் புள்ளி விவரங்களோடு மிகவும் துல்லியமாக, துணிச்சலாக அதனை எடுத்துரைப்பதில் அவர் வல்லவர்.

பி.கே.ஆர். கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து அக்கட்சிக்கு முதுகெலும்பாக இருந்து அதன் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு அவர் பாடுபட்டார் என்பது வெள்ளிடை மலை. குறிப்பாக அன்வார் இரு முறை சிறை சென்ற போது ரஃபிஸிதான் அக்கட்சிக்கு அரணாக இருந்து செயல்பட்டார்.

இருந்த போதிலும் அன்வார் தனது மகள் நூருல் இஸாவை கட்சியில் முன்னிலைப்படுத்தும் திட்டத்தில் ரஃபிஸியை அப்பட்டமாகவே ஓரங்கட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அன்வார் செய்த அந்தத் தவறானது தற்போது அவருடைய நிம்மதியை  மட்டுமின்றி பிரதமர் பதவியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ரஃபிஸி தலைமையிலான, அக்கட்சியைச் சேர்ந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது முன்னுதாரணம் இல்லாத, துணிச்சல் மிக்க ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய நேர்மைக்கு இது மிகப் பெரிய ஒரு சவாலாகும்.

அவருடைய கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அவரின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதையே இது பறைசாற்றுகிறது.

மலேசிய சட்டத்துறைக்கு தேவையான உயர் நீதிபதிகளை நியமனம் செய்வதில் அன்வார் தவறிழைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டும் அவர்கள், அரச விசாரணை ஆணையம் அமைத்து அவரை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு நின்று விடாமல் இந்த குளறுபடி தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழுவும் அவரை விசாரிக்க வேண்டும் என அந்த 9 மக்களவை உறுப்பினர்களும் ஒருசேரக் கோருகின்றனர்.

இத்தகைய விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர்கள் மன்றமும் கூட வலியுறுத்துகிறது. இதன் தொடர்பாக மகஜர் ஒன்றையும் பிரதமர் அலுவலகத்தில் அம்மன்றம் சமர்ப்பிக்கவிருக்கிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையரும் சமூக நல போராட்டவாதியும்  வழக்கறிஞருமான லத்திஃபா கோயாவும் கூட அன்வாரின் போக்கை சாடியுள்ளார்.

இதற்கிடையே அரச விசாரணை ஆணைய உறுப்பினர்களின் நியமனத்தில் அன்வாரின் பங்கும் இருக்கும் என்பதால் இது ஆக்ககரமான விளைவுகளைத் தராது என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராஹிம் கருத்துரைத்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார். அதற்கான சாத்தியத்தையும் நாம் நிராகரித்துவிட முடியாது.

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜ.செ.க., அம்னோ மற்றும் கிழக்கு மலேசிய கட்சிகள் எல்லாமே இவ்விவகாரத்தில் தற்போது மவுனமாக இருப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அவர்களுடைய முடிவு அன்வாருக்கு எதிராக  அமையுமா?

மற்றொரு கோணத்தில் பார்த்தால், நீதித்துறையில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது தெரிந்தும் அக்கட்சிகள் மவுனம் களைய மறுப்பது அவற்றின் சுயநலப் போக்கைதான் பிரதிபலிக்கிறது.

அன்வாரை பகைத்துக் கொண்டால் தற்பொழுது அக்கட்சிகள் அனுபவிக்கும் பதவி சுகபோகங்களுக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்பு உள்ளதுதான். ஆனால் அதன் பிறகு எந்தத் துணிச்சலில் மக்களை சந்திப்பார்கள் எனும் கேள்வியும் எழுகிறது.

அன்வார் மீது  பொது மக்கள் மட்டுமின்றி பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிருப்தியாகவே உள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் மடானி அரசாங்கம் கவிழக்கூடிய சாத்தியம் இருப்பதை மறுக்க இயலாது.