பெர்சே மக்கள் நீதிமன்ற விசாரணை: ஏஜியை சாடினார் குர்தயாள்

Bersih - Peoples Tribunalபொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்ட மக்கள் நீதிமன்ற விசாரணையை ஒரு விளம்பர பகட்டு வித்தை என்று நேற்று கூறிய மலேசிய சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டெய்லை அந்நீதிமன்ற விசாரணையை வழிநடத்திய பேராசிரியர் குர்தயாள் சிங் நிஜார் கடுமையாகச் சாடினார்.

“மக்கள் நீதிமன்றம் ஒரு விளம்பர பகட்டு வித்தை என்று அட்டெர்னி-ஜெனரல் கூறியிருப்பது நம்மை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கேட்கவும் படிக்கவும் வைக்கும் இது போன்ற அறிக்கைகள் வருத்தத்திற்குரியாதாகும்”, என்றார் குர்தயாள்.

“அவர் கூறியிருப்பது மக்கள் நீதிமன்றம் மேலான அவரது ஒட்டுமொத்த அறியாமையைக் காட்டுகிறது. அது அவரது பதவிக்கு இழுக்காகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

Bersih - Peoples Tribunal1இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு எந்த சட்ட அடிப்படையும் கிடையாது என்று செப்டெம்பர் 19 இல் கூறிய அப்துல் கனி பட்டேய்ல், அந்த மக்கள் நீதிமன்ற விசாரணை குழுவில் இரு வெளிநாட்டினர் இருப்பதை மலேசிய விவகாரங்களில் “தலையிடுவது” ஆகும் என்றும் கூறினார்.

இது போன்ற மக்கள் நீதிமன்றங்கள் இதற்கு முன்பு அமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய குர்தயாள், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கோலாலம்பூரில் நடத்திய போர் குற்றங்கள் மக்கள் நீதிமன்றம் மற்றும் பரசெல்லை தளமாகக் கொண்ட ரஸ்ஸல்-சார்ட்ரே நீதிமன்றம் ஆகியவற்றை ஆதாரமாக கூறினார். எவரும் கேட்க விரும்பாத குறைகளை கேட்பதற்கு இவை தேவைப்படுகின்றன என்றார்.

“யாராவது எதையாவது செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் மக்கள் நீதிமன்றத்தின் நோக்கம். சமுதாயம் எடுத்துக் கொண்ட முதல்படி முயற்சியை அது நிறைவேற்றுகிறது, சில சமயங்களில் தேசிய அளவிலும், சில சமயங்களில் உலகளவிலும்”, என்று குர்தயாள் மேலும் கூறினார்.