‘உதவித் தொகைக்கு ஒருவரும் அரசுக்கு நன்றி சொல்வதில்லை’

1 ministerஎவ்வளவோ உதவித் தொகைகள் கொடுக்கப்படுகின்றன ஆனால், மக்கள் நன்றி சொல்வதில்லை என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் அங்கலாய்த்துக் கொண்டார்.

“உதவித் தொகை கொடுக்கும்போது ஒருவரும் (அரசுக்கு) நன்றி சொல்வதில்லை. ஆனால், உதவித் தொகையைக் குறைத்தால் போது ஆர்ப்பரிக்கத் தொடங்கி விடுவார்கள்”, என்றாரவர்.

இந்த துணை அமைச்சர் தம்மை யார் என்று நினைத்துக் கொண்டு மக்கள் இவருக்கு நன்றி கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இவருடைய எஜமானர்கள் யார் என்று இவருக்கு இன்னும் தெரியவில்லை என்பது இவர் மக்களிடமிருந்து நன்றையை எதிர்பார்ப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

மக்கள் ஆட்சியில் மக்கள்தான் எஜமானர்கள். மந்திரிகள், பிரதம மந்திரியிலிருந்து  அனைத்து மந்திரிகளும், அவர்களின் எடுபிடிகளும், மக்களின் சேவர்கள். அவர்களுக்கு வேலை கொடுத்தது மக்கள். அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது மக்கள். அவர்களை வேலையிலிருந்து நீக்குவதும் மக்கள். தங்களுக்கு தேவைப்படுபவைகள் குறித்து ஆவன செய்வதற்கு மக்கள் இவர்களைத் தேர்வு செய்து, பதவியில் அமர்த்துகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பைப் பெற இந்த துணை அமைச்சர் எப்படியெல்லாம் தெருத் தெருவாகச் சுற்றி அலைந்து மக்களிடம் தம்மைத் தேர்வு செய்து வேலை கொடுக்குமாறு கெஞ்சி நின்றார் என்பதை இவர் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் நன்றி கூற வேண்டும் என்ற ஆணவத்தை விடுத்து மக்களுக்கு வேண்டியதை அவர்களைத் தேடிச் சென்று செய்ய வேண்டும். அதுதான் மந்திரியின் கடமை.