இழுத்து மூடிவிடுவேன்: ஊடகங்களை மிரட்டினார் ஜாஹிட்

1 1zaidiஉள்துறை அமைச்சர் அஹ்மட்  ஜாஹிட் ஹமிடி,  ஊடகங்களை எச்சரிப்பது, மிரட்டுவது போன்ற செயல்களைத் தொடங்கி இருக்கிறார் போலத் தோன்றுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அவர், காணாமல்போன போலீஸ் துப்பாக்கிகள் பற்றிக் கேள்விகேட்ட மலேசியாகினி செய்தியாளரை நோக்கி, “இனி, அதைப் பற்றிப் பேசவே கூடாது” என்று எச்சரித்தார்.

அதற்கடுத்த நாள், மலாக்கா, ஆயர் குரோவில்,’Majlis taklimat keselamatan bersama pemimpin masyarakat’(சமூகத் தலைவர்களுடன் பாதுகாப்பு விளக்கக் கூட்டம்) என்னும் நிகழ்வில் பேசிக் கொண்டிருந்தார்.

அதில், கூட்டரசு, மாநில அரசுகளின் சின்னங்கள் காணப்பட்டாலும், அது அம்னோ பேராளர்களுக்கான கூட்டம் என்பதை ஜாஹிட்டின் பேச்சு உணர்த்தியது.

அதில், 1959 குற்றத் தடுப்புச் சட்டம் பற்றி விளக்கிய அமைச்சர், மலாய்க் குண்டர் சங்கங்கள் பற்றிக் கிண்டலும் கேலியும் செய்ததுடன் இந்திய, சீன சமூகங்களைச் சீண்டும் வகையிலும் பேசினார்.

கடந்த காலங்களில், குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களை விடுவிக்கும்படி  பிஎன் தலைவர்கள் சிபாரிசு செய்ததையெல்லாம் அவர் குறிப்பிட்டார்.

அப்படிப் பேசிக் கொண்டு வந்தவர் அப்போதுதான் செய்தியாளர்கள் இருப்பதை உணர்ந்தார் போலும்.

“செய்தியாளர்கள் இருந்தால் மன்னிக்கவும். யாரும் இதைப் பிரசுரிக்க வேண்டாம்”, என்று நயமாகக்  கேட்டுக்கொண்டார்.

ஆனால் நிகழ்வின் இறுதியில்,  அவரது தொனி மாறியது. அங்கு நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என்று எச்சரித்தார்.

“இதைப் பற்றி யாரும் எழுதக் கூடாது. என்னையோ கூட்டத்தையோ படம் எடுக்கக் கூடாது. அதை அனுமதிக்க மாட்டேன்.  இது ஓர் இரகசிய கூட்டம்.

“நான் பேசியது எதுவும் செய்தித்தாளில் வெளிவந்தால் அச்செய்தித்தாளையே இழுத்து மூடிவிடுவேன்”, என்று உரத்த குரலில் மிரட்டினார்.

கூட்டத்தினரும் செய்தியாளர்களை நோக்கி ‘குளுவார் (வெளியே போ)’ எனக் கூச்சலிட்டனர்.

 

 

 

TAGS: