கல்விப் பெருந்திட்டம் தமிழ்க்கல்விக்கு ஆபத்தானது

K. Arumugam_suaramமலேசியக் கல்விப் பெருந்திட்டம் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழ்க் கல்வியையும் வெகுவாக பாதிக்கும் என்பதால் நமது சமூகம் சீனர்களைப் போல் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. நேற்று பெட்டாலிங் ஜெயாவில் சீனக் கல்விமான்களுடன் தமிழ் அறவாரியம் நடத்திய ஒரு கலந்துரையாடலின் விளைவாக அம்முடிவு எடுக்கப்பட்டதாக அதை ஒருங்கிணைத்த தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் அறவாரியத்தின் தலைவர் பசுபதி சிதம்பரம், அதன் முக்கிய உறுப்பினர்கள் இராகவன், காத்தையா, உதயசூரியன் மற்றும் சைல்டு நிறுவனத்தை சார்ந்த டாக்டர் ஐயங்கரன், டாக்டர் குணலட்சுமி, சிலாங்கூர் சமூக அமைப்பை சார்ந்த எல். சேகரன், மற்றும் சேவையாளர் சாமூவேல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவும் முன்னாள் செனட்டர் இராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர். டோங் ஜோங் அமைப்பின் தலைவர் டாக்டர் யாப் சின் தியன் தலைமையில் எட்டு சீனக் கல்விமான்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் 10-ஆம் தேதி மலேசியக் கல்விப்  பெருந்திட்டத்தைத் துணைப்பிரதமர் முஹிடின் யாசின் அதிகார பூர்வமாக வெளியிட்டார். அதற்கு முன்பே 22.8.2013 -இல் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) மீது எதிர்ப்பு வந்தாலும் அது கண்டிப்பாக அமுலாக்கப்படும் என்று கோடி காட்டியிருந்தார்.

blueprintஇந்த 292 பக்கங்களைக் கொண்ட மலேசியக் கல்விப்  பெருந்திட்டம் தாய்மொழிக்கல்விக்கு ஆபத்தை விளைவிக்குமா என்ற வினா பரவலாகவே இருந்தது. இது சார்பாக தெளிவான விளக்கங்கள் கிடைக்காததால் பொதுவாகவே தாய்மொழிப் பற்றாளர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலவில்லை. அரசாங்கத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் இது சார்பாக எதையும் தெளிவாக கூறவில்லை. தமிழ் பத்திரிக்கைகளும் இது சார்பான விவாதங்களை முன்னெடுக்கவில்லை.

எவ்வகையான தாக்கங்கள் உருவாகும் என்பதை விவரித்த கா. ஆறுமுகம், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மையைக் காலப்போக்கில் மாற்றி விடும் குறியீடுகளைக் கொண்டுள்ளது என்றும், அது முதலில் ஒற்றுமைக்கு மலாய் மொழியின் தேவையை உறுதி செய்ய, மலாய் மொழி பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்கச் செய்யும் என்றார். அதற்கேற்ப ஆசிரியர்களை அமர்த்துதல். குறைவான தமிழ்மொழி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் குறைவான தமிழ் மொழி ஆசிரியர்களை உருவாக்குதல் போன்றவை அதன் தாக்கங்கள் என்றார்.

najib_tamil_schoolஅடுத்தது, பாலர்க் கல்வி முதல் மலாய் மொழியின் ஆதிக்கத்தைக் கட்டாயப்படுத்துதல். அதற்கேட்ப ஆசிரியர் தேவைகளை உருவாக்குவார்கள். இதன்வழி ஆரம்ப்பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மலாய் மொழியில் புரிந்துகொள்ளும் தன்மையுள்ளதால் அறிவியல் கணிதம் போன்ற பாடங்களை மலாய் மொழியில் போதிக்கும் நிலையை உருவாக்குவார்கள். இறுதியில் தமிழ்மொழியைத் தவிர மற்ற எல்லாப்பாடங்களும் பிற மொழிகளில்தான் இருக்கும். தமிழ்ப்பள்ளி தனது தனித்தன்மையை இழந்துவிடும்.

மேலும் அரசாங்க கொள்கை மலாய்மொழி பள்ளியை முன்னிலை படுத்தும் வகையில் இருப்பதால், மலாய் மொழியை முன்னிலைப் படுத்தாத பள்ளிகள் புறகணிக்கப்படும் நிலையை உருவாக்கும்.

அதோடு மட்டுமல்லாமல், 2021 தொடக்கம் அரசாங்கம் தனது மூன்றாவது கட்டமாக தாய்மொழி என்பதை மலாய் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்த கட்டத்தில்தான் வைக்கிறது. அதற்கேற்ப புதிய ஆரம்ப பள்ளிக்கான (KSSR) பாடத்திட்டத்தை மலாய் மொழியில் அறிமுகப்படுத்தும். அதன்வழி அறிவியல், கணிதம் மற்றும் புறப்பாடங்கள் மலாய் மொழிக்கு மாற்றப்படும்.

2021 முதல் 2025 காலக்கட்டத்தில் தேசியப் பள்ளிகள்தான் பெற்றோர்களின் முதன்மை தேர்வாக அமைய வேண்டும். தேசிய ஒற்றுமையை கருத்தில் கொண்டு தேவைப் பட்டால் பள்ளிக்கூட அமைப்பு முறைகள் சீரமைப்பு செய்யப்படும். அதாவது, தேசிய ஒற்றுமை கருதி தாய்மொழிப்பள்ளிகள் மாற்றம் செய்யப்படும் என்பது இதன் உட்பொருளாகும் என்கிறார் ஆறுமுகம்.

இது சார்பாக தமிழ் அறவாரியம் ஒரு விளக்கக் கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்ய உள்ளதாக அதன் தலைவர் பசுபதி கூறினார்.