ஆங்கில மொழி பயிற்சி அளிக்க ரிம270 மில்லியனா?

DAP-Zairil-Johariசமீபத்தில் மலேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 தயாரிப்பதற்கு அறிவுரை வழங்கியதற்காக பிரிட்டீஸ் மெக்கின்சி நிறுவனத்திற்கு ரிம20 மில்லியனை கல்வி அமைச்சு கொடுத்தது.   அது ஒன்ரும் பெரிய விசயமல்ல. எனது நாடாளுமன்ற கேள்விக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் உள்ளூர் ஆங்கில மொழி ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி  அமைச்சு மூன்று வெளிநாட்டு அறிவுரை வழங்கும் அமைப்புகளை நியமித்திருப்பதாக தெரிவித்தார். பிரிட்டீஷ் கவுன்சில், பிரைட்டன் கல்வி குழு மற்றும் எஸ்எம்ஆர் எச்ஆர் ஆகியவை அந்த மூன்று அறிவுரை வழங்கும் அமைப்புகளாகும் என்று டிஎபி ஸைரில் கூறுகிறார்.

மூன்று ஆண்டு குத்தகைக்கு  (2011 – 2013) அந்த மூன்று அமைப்புகளுக்கும் கொடுக்கப்படும் தொகை ரிம268.5 மில்லியன் அல்லது ஆண்டொன்றுக்கு ரிம89.5 மில்லியன். ஒப்பந்தப்படி இந்த மூன்று அமைப்புகளும் மூன்று ஆண்டுகளுக்கு 360 உள்ளூர் ஆங்கில மொழி பேசும் போதகர்களை வழங்கும் என்று  ஸைரில் கிர் ஜொகாரி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமக்கு கிடைத்த நாடாளுமன்ற பதிலின்படி 1,800 பள்ளிகளிலிருந்து மொத்தம் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தப்படி, 360 போதனையாளர்களுக்கும் மொத்தம் ரிம270 மில்லியன் செலவிடப்படும். அதாவது, ஒரு போதகருக்கு ஓர் ஆண்டுக்கு ரிம250,000, அல்லது கிட்டத்தட்ட ரிம21,000 ஒரு மாதத்திற்கு என்று புக்கிட் பெண்டெரா நாடாளுமன்ற உறுப்பினரான ஸைரில் கிர் ஜொகாரி விளக்கம் அளிக்கிறார்.

ஆங்கில மொழி போதிக்கும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம்தான் என்று கூறும் ஸைரில், வெளிநாட்டு அறிவுரையாளர்களுக்கு இவ்வளவு பெரும் தொகை கொடுப்பதில் எவ்வித நியாமும் இல்லை என்றாரவர்.

( டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ஸைரில் கிர் ஜொகாரி அவரது அறிக்கையை மலாய், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் வெளியிட்டிருந்தார். அதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன், தமிழ் மொழி என்ற இன்னொரு மொழி இருப்பதை அவருக்கு நினைவூட்டி அது குறித்து சிந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். செம்பருத்தி.கோம்)