இஸ்ரேல்- பாலஸ்தீனத்துக்கிடையே கைதிகள் பரிமாற்றம்

2006-ம் ஆண்டு பாலஸ்தீன ஆயுததாரிகளால் காஸா பகுதியில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய சிப்பாய் கிலாத் ஷலித்தின் விடுதலைக்கு பிரதிபலனாக சுமார் 500 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.

இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இவர்களையெல்லாம் இரண்டு சிறைகளில் அதிகாரிகள் திரட்டி வைத்துள்ளனர்.

நாளை செய்வாய்க்கிழமை இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் முதற்கட்டமாக ஐநூறு கைதிகள் விடுவிக்கப்படுவதைத் தாண்டி இந்த ஆண்டின் பிற்பகுதியில் வேறொரு ஐநூற்று ஐம்பது பேரையும் இஸ்ரேல் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இஸ்ரேல் வெளியிட்டுள்ள விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்ப் பட்டியலில் பாதிப் பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள் ஆவர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுட்தண்டனைகளை பெற்றுள்ள கைதிகளிகளில் பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களால் மேற்குக் கரைக்கு வீடு திரும்ப முடியாது எனத் தெரிகிறது.

இவர்களெல்லாம் ஒன்று காஸா பகுதிக்கோ அல்லது வெளிநாடு ஒன்றுக்கோ நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

கைதிகள் விடுதலை தொடர்பில் இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பில் இந்த ஒப்பந்தத்துக்கு கணிசமானப் பெரும்பான்மையில் மக்கள் ஆதரவு இருப்பதாகவே முடிவுகள் வந்துள்ளன.