ஆசிரியர் விளக்கமளிப்புக் கூட்டத்தை வேறொரு நாளில் நடத்த வேண்டும்

kula_01தீபாவளிக்கு முதல்நாளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வைக் கண்காணிக்கும்  ஆசிரியர்களுக்கான விளக்கமளிப்பை வேறொரு நாளில் நடத்த வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வேண்டுகோளை விடுத்த டிஏபி தேசிய உதவித் தலைவர் எம்.குலசேகரன்,  அரசாங்கம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.   தீபாவளிக்கு முதல்நாள் இந்து குடும்பத்தினர்  ஒன்றுகூடி தங்கள் முன்னோர்களுக்கு படையல் படைத்து வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம் என்றாரவர்.

2011-இல் தாமும் பக்காத்தான் ரக்யாட் எம்பிகளும்  எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்து தீபாவளிக்கு முதல்நாள்  நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டம் வேறொரு நாளுக்கு மாற்றப்பட்டதையும் அப்போதே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பள்ளிகளின் கல்வித் திட்டமும் தேர்வுகளும் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்காதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்று அறிவித்ததையும் குலசேகரன் சுட்டிக்காட்டினார்.

“ஆனால், இந்திய சமூகத்தின் உணர்வுகள் மீண்டும் மதிக்கப்படவில்லை, அது ஏன்?”, என்று ஈப்போ பாரட் எம்பி-யுமான அவர் ஓர் அறிக்கையில் வினவியுள்ளார்.