பள்ளியில் மாடுகள் வெட்டப்பட்டதைத் தற்காத்துப் பேசுகிறார் பள்ளி முதல்வர்

1 aidilசிலாங்கூர்  எஸ்கே பூச்சோங் ஜெயா பள்ளி முதல்வர்,  முகம்மட் அமின் பஹாரி   அப்பள்ளியில் கடந்த வாரம் அய்டில் அட்ஹா-வையொட்டி மாடுகள்  வெட்டப்பட்ட சம்பவத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார்.

சரவணன் என்பாருக்கு முகம்மட் அமின்  அளித்துள்ள விளக்கத்தின் ஒலிப்பதிவு,  ஐந்து நாள்களுக்குமுன் யு-டியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதில்,  சரவணன் பள்ளியில் மாடுகள் வெட்டப்பட்டது  ஏன் என்று கேட்கிறார்.  அதற்கு, பள்ளி முதல்வர்  அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறும் சுற்றறிக்கை எதுவும் இல்லை என்கிறார்.

“இஸ்லாத்தில், முஸ்லிம்களிடையே,  குறிப்பாக மாணவர்களிடையே ஹரி ராயா கொர்பானின்போது  அவ்வாறு  பலியிடுவது  ஊக்குவிக்கப்படுகிறது.  அது இளைஞர்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவுகிறது”.

ஆனால், அதில்,  பசுக்களைப் புனிதமாக போற்றும் இந்துகளை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்பதை முகம்மட் அமின் தெளிவுபடுத்தினார்.

“மற்ற சமயங்களை இழிவுபடுத்தும் நோக்கில் அது செய்யப்படவில்லை. இந்திய ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் முஸ்லிம்-அல்லாத மற்ற மாணவர்களிடமும் அந்த இடத்திலிருந்து விலகி  இருக்குமாறு கூறி இருந்தோம். அவர்களை (பார்ப்பதற்கு) அனுமதிக்கவில்லை”,  என்றாரவர்.

பள்ளி நடவடிக்கை எல்லாமே,  முஸ்லிம்-அல்லாத ஆசிரியர்கள் உள்பட எல்லா ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசித்தே முடிவு செய்யப்படுகின்றன என்றும் முகம்மட் அமின் கூறினார்.

ஒலிப்பதிவில் இருப்பது தமது குரல்தான் என்பதை முகம்மட் அமின் ஒப்புக்கொண்டார். ஆனால், அது பற்றி அவர் எதுவும் பேச மறுத்தார். பேசக்கூடாது  என்பது சிலாங்கூர் கல்வித்  துறையின் உத்தரவாம்.