நஸ்ரி: பிஎஸ்சி மூலம் புதிய தேர்தல் சட்டம் உருவாகலாம்

நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி), அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் சுதந்திரமான நியாயமான ஜனநாயக நடைமுறையை உறுதிப்படுத்த புதிய தேர்தல் சட்டமொன்றை உருவாக்குவது பற்றி ஆராயும் எனப் பிரதமர்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறுகிறார்.

“தேர்வுக்குழு, தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஓர் அறிக்கையைத் தயாரித்த பின்னர் தேர்தல் ஆணையத்துடன்(இசி) கலந்துபேசி சில முடிவுகளை எடுத்து அம்முடிவுகள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் அமைச்சரவையின் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப்படும். அதன் ஒப்புதல் கிடைத்ததும் முடிவில் சட்டமாக உருவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்”, என்று நஸ்ரி கூறியதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.

ஒரு சட்டத்தை வரைய நீண்ட காலம் பிடிக்கும் என்றாலும் இந்தச் சட்டத்தை அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் நடைமுறைக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்புவதாக நஸ்ரி கூறினார்.

“2013 மார்ச் மாதத்துக்குமுன் பொதுத்தேர்தலை நடத்தியாக வேண்டும். பொதுத்தேர்தல் 2013-இல் என்றால் அது புதிய தேர்தல் சட்டப்படி நடத்தப்படும். ஆனால் பொதுத்தேர்தல் எப்போது என்பது எனக்குத் தெரியாது. பிரதமர் மட்டுமே அதை அறிவார்.”

தேர்வுக்குழு அமைப்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறிய நஸ்ரி, அக்குழுவின் ஆய்வுஎல்லைகள், அதில் இடம்பெறும் பிஎன் பேராளர்கள் போன்றவை குறித்தும் அதில் முடிவு செய்யப்படும் என்றார்.

அக்குழுவுக்கு மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தலைமைவகிப்பார் என்றவர் எதிர்பார்க்கிறார். அதில் இடம்பெறும் மாற்றரசுக் கட்சி பிரதிநிதிகளை மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் முடிவு செய்வார்.

அமைச்சரவை, கடந்த வாரம் அதன் வாராந்திரக் கூட்டத்தில் நிரந்தர வசிப்பிடத் தகுதியுள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வாக்காளர்கள் ஆக்கப்படுவதாக பக்காத்தான் கூறும் குற்றச்சாட்டுகள் பற்றி விவாதித்ததாகவும் நஸ்ரி கூறினார்.

அதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்வுக்குழு அமைப்பதென முடிவானது.

அக்குழு அமைப்பது பற்றி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் திங்கள்கிழமை அறிவித்தபோது அதை மாற்றரசுக் கட்சிகளும் பெர்சே 2.0 உள்பட பொது அமைப்புகளும் வரவேற்றன.

என்றாலும் பக்காத்தான் சில கோரிக்கைகளை முன்வைத்தது. அக்குழுவுக்குப் மாற்றணி எம்பி ஒருவர் தலைவராக இருக்க வேண்டும், அதன் பணி முடிந்து சீர்திருத்தங்கள் செய்யப்படும்வரை பொதுத் தேர்தலை நடத்தப்படாது என்று நஜிப் உத்தவாதம் அளிக்க வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்துள்ளது.