சிந்தனைக்குழு: 2020-க்குள் ரிம1 ட்ரில்லியன் கடன்

கூட்டரசு பட்ஜெட் கடன் ஆண்டுக்கு ரிம50பில்லியன் என்று உயர்ந்து வந்தால் 2020-தில் அத்தொகை ரிம1ட்ரில்லியனை எட்டிவிடும். சுயேச்சை சிந்தனைக் குழுவான சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு(ரெஃப்சா) மையம் இவ்வாறு அறிவித்துள்ளது.

2012 பட்ஜெட் மீது கண்ணோட்டம் இட்ட ரெஃப்சா, அரசாங்கம் நிதி விசயத்தில் விவேகமாக நடந்துகொண்டாலொழிய 2020 தொலைநோக்குத் திட்டம் “உடைந்த கனவாய் தூள்தூளாகி” விடலாம் என்று எச்சரித்தது.

நடப்புப் பற்றாக்குறையின் அளவு ரிம437பில்லியன். இது, 2004 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரிம217 மில்லியன் பற்றாக்குறையைவிட இருமடங்கு அதிகமாகும்.

“மெர்டேகா பெற்ற 47 ஆண்டுகளில் பட்டிருந்த கடனைவிட கடந்த ஆறரை ஆண்டுகளில் சேர்ந்துகொண்ட கடன்தொகை அதிகமாகும்”, என்று அதன் ஆய்வு அறிக்கை கூறியது.

2007-க்கும் 2011-க்குமிடையில் பற்றாக்குறை ஆண்டுக்கு ரிம34பில்லியன் என்ற விகிதத்தில் வளர்ந்துகொண்டு வந்திருக்கிறது.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் 2020-இல், மொத்த கடன்தொகை ரிம1ட்ரில்லியனாக உயரும் என எதிர்பார்க்கலாம்.
 
ஒரு ட்ரில்லியன் ரிங்கிட் என்பது ஒன்றுக்குப் பின் 12 சுழியங்களைக் கொண்டது -ரிம1,000,000,000,000.

இந்தக் கடனுக்கு  5விழுக்காடு வட்டி என்று பார்த்தால்கூட ஆண்டுக்கு ரிம50மில்லியன் செலுத்த வேண்டிவரும்.

பக்காத்தான் பட்ஜெட்டுடன் ஒப்பீடு

ரிம1ட்ரில்லியன் கடனை வைத்துப் பார்க்கும்போது 12 மில்லியன் தொழிலாளர்களில் வரிசெலுத்துவோராக இருக்கும் 1.7 மில்லியன் பேரும் ஆளுக்கு ரிம590,000 செலுத்த வேண்டியவர்களாக இருப்பார்கள்.

“80விழுக்காட்டு வீடுகளில் சராசரி வருமானம் மாதம் ரிம2,500தான். எண்ணெய் இருப்புகளும் குறைந்து வருகின்றன.இந்நிலையில் கடனை எப்படித் தீர்க்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை”, என்றது குறிப்பிட்டது.

பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என ரெஃப்சா குறைகூறியது. அரசு பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது பக்காத்தான் ரக்யாட் நிழல் பட்ஜெட்,  ரிம10பில்லியனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செலவினத்தைச் சுருக்கிக்கொண்டுள்ளது என்று ரெஃப்சா கூறியது.

நிழல் பட்ஜெட்டும் அரசின் பட்ஜெட்டும் பார்ப்பதற்கு ஒன்றேபோல்தான் காணப்படுகின்றன. பற்றாக்குறை 4.7 விழுக்காடு என்று அரசு கூறும்போது பக்காத்தான் அதை 4.4விழுக்காடு என்று கூறியுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் அதிக வேறுபாடுகள் தெரிவதில்லை. ஆனால், உள்ளுக்குள் நிறைய வேறுபாடுகள் உண்டு.

“பக்காத்தான் செலவினக் குறைப்பை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.”

ரெஃப்சா, மலேசியர்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படுகிறது என்பதை விளக்கும் அறிக்கைகளை 2012பட்ஜெட்டுக்கு முன்னும் பின்னும் வெளியிட்டு வந்துள்ளது.

ரெஃப்சா வுக்குத் தலைமையேற்றுள்ள தே சீ சாங், 16 ஆண்டுகள் நிதி ஆலோசகராக பணியாற்றியுள்ளார். டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் பொருளாதார ஆலோசகராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.

பக்காத்தான் பட்ஜெட்டில் தே-இன் பங்களிப்பு உண்டு. ஆனால் அதற்காக அவரோ ரெஃப்சாவொ பணம் பெற்றதில்லை என்று அந்த அறிக்கை கூறிற்று.