‘ரிம10 மில்லியனை இடமாற்றம் செய்த நெகிரி எம்பிமீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’

1-anthonyநெகிரி செம்பிலான் மந்திரி புசார்(எம்பி) முகம்மட் ஹசான் ரிம10 மில்லியனை  நாணய மாற்று வணிகர்  மூலமாக இடமாற்றம் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டத்துறை தலைவர் அலுவலகம்  “இரட்டை நியாயத்தை”க் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களவையில் 2014 பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட அந்தோனி லொக் (டிஏபி-சிரம்பான்), 2009-இலிருந்தே அதிகாரிகள் அவ்விவகாரம்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருக்கிறார்கள் என்றார்.

நாணய மாற்று வணிகர் மூலமாக பணத்தை இடமாற்றம் செய்த ஒரு ‘டான்ஸ்ரீ’க்கு பேங்க் நெகாரா ரிம2 மில்லியன் அபராதம் விதித்ததாகக் கூறும் அண்மைய செய்தி ஒன்றை அவர் சுட்டிக்காட்டினார்.

“சாதாரண மக்கள் சட்டவிரோதமாக பணத்தை இடமாற்றம் செய்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதையே நெகிரி செம்பிலான் எம்பியும்  அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான   ஒருவர்  செய்யும்போது நடவடிக்கை எதுவும் இல்லை.

“இப்படி இரட்டை நியாயம் கடைப்பிடிக்கப்படுவதும் ஆள் பார்த்து நடவடிக்கை எடுப்பதுவும் ஏன்?”, என்று லொக் வினவினார்.