ரோஸ்மாவின் ஜெட் விமானப் பயணத்திற்கு மக்கள் பணம்!

First Lady Mansonஇம்மாதத் தொடக்கத்தில் கட்டாருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நஜிப்பின் துணையார் ரோஸ்மா மன்சூர் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்தியது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் துறை அமைச்சர் சகாடின் காசிம் குடைந்தெடுக்கப்பட்டார்.

அரசாங்க விதிகளின்படி ரோஸ்மாவுக்கு அதுபோன்ற சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றனவா என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.

“இப்பயணம் முக்கியமானது என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்து ஜெட் விமானம் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி அளித்தது”, என்று சகிடான் பதில் அளித்தார்.

பிரதமர் துணைவியார் அரசு ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவது குறித்து அமைச்சரவை விவாதித்த போது பிரதமர் அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அது தன்னல மோதலாகும். அவர் அக்கட்டத்தில் அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளியேறியிருக்க வேண்டும். தன்னல மோதல் என்ற சூழ்நிலையில் பிரதமர் நடைமுறைகளைப் பின்பற்ற தவறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்றெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இவற்றை எல்லாம் புறக்கணித்த அமைச்சர் காசிம், அது ஓர் அதிகாரப்பூர்வமான பயணம் என்பதை மட்டும் வலியுறுத்தினார்.

“நாட்டு மக்களின் நன்மைக்காக அவரது துணைவியார் நாட்டை பிரதிநிதித்தார்”, என்றார் அமைச்சர்.

பிரதமரின் துணைவியார் பிரதமருடன் செல்லலாம். ஆனால், பிரதமரின் துணைவியார் நாட்டை பிரதிநிதிப்பது என்பது நடைமுறைக்கு முரணானது. இது உலகில் வேறெங்கும் நடப்பது இல்லை என்று மாபுஸ் ஒமார் (பாஸ்) கூறினார்.

இத்தாக்குதல்களால் நிலைகுலைந்து போன சகிடான் காசிம் குழப்பமான பதில்களை அளித்தார்.

துருக்கி, அங்காராவில் குறிய காலத்தில் நடைபெறவிருக்கும் ஒரு மாநாட்டில் மலேசியாவை தாம் பிரதிநிதிக்கப் போவதாக குழம்பிப் போன சகிடான் கூறினார்.

இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், “நீர் ஓர் அமைச்சர், மலேசியாவை பிரதிநிதிக்கலாம். ஆனால், உமது துணைவியார் முடியாது”, என்றனர்.

இதனால் கலகலத்துப் போன அமைச்சர் காசிம் இறுதியில் இது ஓர் அதிகாரப்பூர்வமான பயணம் என்று கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் கூற மறுத்து விட்டார்.

இதுதான் அதிகாரப்பூர்வமான பயணம்

ரோஸ்மா அரசு ஜெட் விமானத்தில் நவம்பர் 10 இல் காட்டாரில் நடைபெற்ற  4 ஆவது காட்டார் அனைத்துலக வாணிக மகளிர் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றார்.