கர்பால்: தீர்ப்பைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி பதவி துறக்க வேண்டும்

முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிம் இஷாக், தமக்கு எதிராக தீர்ப்பைத் திருடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதால் தமது பதவித் துறப்புக் கடிதத்தை சமர்பிக்க வேண்டும் என புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

“நீதித்துறையின் தோற்றத்தை பாதுகாக்கவும் நாட்டை மேலும் தர்ம சங்கடத்திலிருந்து காப்பாற்றவும் அவர் பதவி விலகுவது அவசியம்.”

“நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்களை மறுக்குமாறு நான் நீதிபதி மாலிக்கிற்கு அனுப்பிய இரண்டு கடிதங்களுக்கு அவர் மறுப்புத் தெரிவிக்காததால் அவர் பதவி துறப்பதே சரியான கௌரவமான நடவடிக்கையாக இருக்கும்”, என அந்த மூத்த வழக்குரைஞர் கூறினார்.

அந்த விவகாரத்தை ஈராயிரத்தாவது ஆண்டிலேயே சிங்கப்பூர் எழுப்பிய போதிலும் நீதிபதி மாலிக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் போனதற்கு நீதித் துறை மீது பழி சுமத்திய பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸையும் கர்பால் குறை கூறினார்.

“நஸ்ரி சட்டத்துக்குத் தவறாக விளக்கம் கொடுக்கிறார் என நான் எண்ணுகிறேன். ஒரு நீதிபதியை  விலக்க வேண்டுமானால் கூட்டரசு அரசியலமைப்பின் 125வது பிரிவின் கீழ் பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும்.”

“தலைமை நீதிபதி ஒரு நீதிபதியை நீக்க முடியாது. ஏனெனில் அதற்கு சட்டத்தில் அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை,” என்றார் கர்பால்.