கணக்கு அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும்?

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கணக்கு அறிக்கை, திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று பொதுக் கணக்குக் குழு(பிஏசி)வுக்கு அணுக்கமான வட்டாரமொன்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.

இதை மற்றவர்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றபோது அவர்கள் அது சாத்தியமில்லை என்றனர். திங்கள்கிழமைதான் பொதுக் கணக்குக் குழு அந்த அறிக்கையை விவாதிப்பதற்காக ஒதுக்கியுள்ள நாளாகும் என்றவர்கள் கூறினர்.

பிஏசி உறுப்பினர் டோனி புவா, கணக்கறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என்றார்.

“அக்டோபர் 24 (திங்கள்கிழமை)-இல். அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரைச் சந்திக்கப் போகிறோம். அதனால் அதற்கு முன்னதாகவே அந்த அறிக்கை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறேன்”, என்றாரவர்.

2012 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்மீது விவாதங்கள் நடந்துவரும் வேளையில் கணக்கறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மாற்றரசுக் கட்சியினர் கடுமையாக சாடியுள்ளனர்.

கணக்கறிக்கையின் உள்ளடக்கம் “சில தரப்பினருக்குப் பிடிக்காதிருப்பது” இந்தத் தாமதத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சுங்கை பட்டாணி எம்பி ஜோஹாரி அப்துல் கருதுகிறார்.

பொக்கோக் செனா எம்பி மாபுஸ் ஒமார், சில மாநிலங்களுக்குக்கூட கணக்கறிக்கை கிடைத்துவிட்டது ஆனால் நாடாளுமன்றத்துக்கு அது இன்னும் கிடைக்காமலிருப்பது ஏன் என்று வினவினார்.

அரசாங்கத் தலைமை கணக்காய்வாளரின் அறிக்கை, நாட்டின் செலவினங்கள், கடன்கள், கணக்குகளில் குளறுபடிகள் போன்றவை பற்றியெல்லாம் விவரமான தகவல்களைக் கொண்டிருக்கும் நாட்டின் நிதி நிலைமை பற்றிய மதிப்பீடும் அதில் இடம்பெற்றிருக்கும். பட்ஜெட் பற்றி விவாதிக்க இந்த விவரங்கள் அவசியமானவை என்று மாற்றரசுக் கட்சிகள் வாதிடுகின்றன.

பிஏசி-இன் இன்னோரு உறுப்பினரான  கமருடின் ஜாப்பார்(பாஸ்-தும்பாட்) எம்பிகளுக்கு கணக்கறிக்கை உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுகொண்டார்.  2012 பட்ஜெட்டை விவாதிக்க எம்பிகளுக்கு அது தேவைப்படுகிறது என்றாரவர்.

அந்த ஆண்டறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தலைமை கணக்காய்வாளருக்கு “தணிக்கை செய்யுமாறு அழுத்தம்” கொடுக்கப்பட்டதா என்பதையும் பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்.